இன்று குரூப் 4 தேர்வு!
தமிழகத்தில் குரூப் 4 தேர்வு இன்று (ஜூலை 24) நடைபெற உள்ளது. மொத்தம் 7301 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இத்தேர்வினை மாநிலமும் முழுவதும் 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் மட்டும் 1.56 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இன்று மெகா தடுப்பூசி முகாம்!
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் இன்று 32-வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் சுமார் 2,000 முகாம்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குறைந்த கொரோனா பாதிப்பு !
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,033 இல் இருந்து 2,014 ஆக குறைந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 466 இல் இருந்து 431 ஆக குறைந்தது. 15,843 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,324 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 64வது நாளாக விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
செஸ் ஒத்திகை போட்டியை துவக்கி வைக்கிறார் உதயநிதி
சென்னையில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு செஸ் ஒத்திகை போட்டி நடைபெற உள்ளது. இதனை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைக்க உள்ளார்.
தமிழகம் திரும்பும் எடப்பாடி
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரிவுசார விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்தார் எடப்பாடி. அங்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க அனுமதி கேட்ட நிலையில், இருவரும் மறுத்து விட்டனர். இதனால் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு சென்னை திரும்புகிறார்.
போலி பாஸ்போர்ட் சர்ச்சை – விரைவில் இறுதி அறிக்கை!
போலி பாஸ்போர்ட் சர்ச்சையினை தொடர்ந்து மதுரை க்யூ பிரிவு போலீசார் தங்களது விசாரணையை முடித்துள்ளனர். இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 41 பேர் மீது நீதிமன்றத்தில் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை – சர்வதேச அவசர நிலை!
ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு, தற்போது இந்தியா உட்பட பல உலக நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் விலகிய ஹோல்டர்
இந்திய அணி 5டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி முடிந்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஹோல்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இந்திய அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகி உள்ளார்.
காளைகளை அடக்குவாரா சூர்யா?
நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாடிவாசல்’ படக்குழு சார்பில் நேற்று மாலை வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அது, மாடு பிடித்தலில் உள்ள நுட்பங்களை சூர்யா பயின்ற காட்சிகளின் தொகுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.