மாணவி ஸ்ரீமதியின் உடல் இன்று தகனம்!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று (ஜூலை 23) தகனம் செய்யப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுபடி மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில் சொந்த ஊரான பெரிய நெசலூரில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
மாணவி இறுதிச்சடங்கு – காவல்துறை அறிவிப்பு!
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் இறுதிச் சடங்கில், அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே பங்கேற்க காவல் துறை அனுமதி அளித்துள்ளது. வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்க வேண்டாம் என்றும், சட்டம், ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 63வது நாளாக எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு!
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 21,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் 20,557 ஆக இருந்த பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சென்னையில் 466 பேர் உட்பட 2,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார விழா!
டெல்லியில் நட்சத்திர ஓட்டலில் நடந்த பிரிவு உபச்சார விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு நேற்று இரவு விருந்து அளித்தார் பிரதமர் மோடி. இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மரம் நட்டால் மின்சாரம் இலவசம்!
வீட்டில் மரம் நட்டு, அவற்றை பாதுகாப்பவர்களுக்கு ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ரூ.20 கோடியை மீட்ட அமலாக்கத்துறை!
2018ம் ஆண்டு பள்ளிப் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் கூட்டாளி அர்பிதா முகர்ஜியிடம் இருந்து சுமார் 20 கோடி ரூபாயை அமலாக்க இயக்குனரகம் கைப்பற்றியுள்ளது.
5 தேசிய விருதுகள் : மகிழ்ச்சியில் சூர்யா
சூரரை போற்று’ திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி என்று நடிகர் சூர்யா மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசைக்கான விருது, சிறந்த படம், சிறந்த திரைக்கதைக்கான விருது என மொத்தம் 5 விருதுகளை வென்றுள்ளது.
சந்தோஷம், நிம்மதி 10% கூட பார்த்தது இல்லை – ரஜினி
அறிவு என்றால் புத்தி, சிந்தனை, நீ யார், எங்கிருந்து வந்தவன், சாதி எல்லாம் சேர்ந்தது தான். பணம், புகழ், பெயர், உச்சி, பெரிய பெரிய அரசியல்வாதிகளை பார்த்தவன் நான். ஆனால் சந்தோஷம், நிம்மதி 10% கூட பார்த்தது இல்லை. ஏனென்றால் அவை எதுவும் நிரந்தரம் கிடையாது என்று சென்னையில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் பேசினார்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி 308 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளுக்கு 305 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.