நொய்டா இரட்டை கோபுரம் தகர்ப்பு!
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் இன்று (ஆகஸ்ட் 28) வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளது. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 31 மாடிகளை உடையது; உயரம் 318 அடி.
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்!
காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியுள்ள பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் இடைக்கால தலைவராக உள்ள சோனியாகாந்தி காணொலி மூலம் கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது.
சேலத்தில் அரசு பொருட்காட்சி!
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ள அரசுப்பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் ஆகியோர் இன்று தொடங்கி வைக்கின்றனர். இதனையடுத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 99வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 22,326 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 323 ஆண்கள், 211 பெண்கள் என மொத்தம் 534 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 602 பேர் குணமடைந்த நிலையில் 5,339 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
கபடி இறுதிப்போட்டியில் உதயநிதி ஸ்டாலின்
மணப்பாறையில் உள்ள தியாகேசர் ஆலை திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான கபடி போட்டியின் இறுதிப் போட்டி இன்று மாலை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணியினருக்கு சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பரிசுத் தொகை மற்றும் கோப்பைகளை வழங்கி பாராட்டுகிறார். மேலும் அங்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடக்கும் ஐம்பெரும் விழாவிலும் உதயநிதி பங்கேற்கிறார்.
கொரட்டூரில் ஹேப்பி ஸ்ட்ரீட்!
சென்னை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் இன்று ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கு திறந்தவெளி உடற்பயிற்சியின் முன் முயற்சியின் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையரகம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 28ம் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலையில் ’ஹேப்பி ஸ்ட்ரீட்’ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச்சபை தலைவர் இந்தியா வருகை!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (யுஎன்ஜிஏ) தலைவராக மாலத்தீவுகள் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் இருந்து வருகிறார். அவர், 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகை தர உள்ளார். இந்த வருகையின்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்!
ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
வானிலை நிலவரம்!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை 48 மணி நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மலை பெய்யக்கூடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.