போதைப்பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி!
மாணவர்களிடம் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வரும் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை போதை விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும், அதனை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 11) காலை 10.30 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் போதை விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்க வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை!
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஈபிஸ் , ஓபிஎஸ் என அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை நாளை (இன்று) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார்.
மின் கட்டணம் உயர்வு குறித்து ஆலோசனை!
மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக விவாதிக்க, மின்சார ஒழுங்குமுறை ஆணையம்,சென்னையில் இன்று மாநில ஆலோசனை குழு கூட்டத்தை நடத்துகிறது.அதில் பங்கேற்க, உறுப்பினர்களுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் மின் வாரியம் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பாகவும், மின் கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 82வது நாளாக விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 927 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,55,538 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,08, 919 ஆக உயர்ந்துள்ளன.
பவுர்ணமி கிரிவலம் இன்று தொடக்கம்!
திருவண்ணாமலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் இன்று காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது. பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
குடியரசு துணை தலைவர் பதவியேற்பு!
இந்தியாவின் குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று டெல்லியில் பதவியேற்க உள்ளார். 14-வது குடியரசு துணைத் தலைவராக பதவி ஏற்க உள்ள அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
ரக்ஷாபந்தன் பண்டிகை!
சகோதரத்துவத்தை உணர்த்தக்கூடிய ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. சாதி, மதம், இனம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஆண், பெண், வயது பேதமின்றி ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த பண்டிகை குறிப்பாக வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி62!
மோட்டோரோலா நிறுவனம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியாவில் தனது புதிய மோட்டோ ஜி62 ( Moto G62) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லால் சிங் சத்தா திரைப்படம் ரிலீஸ்!
நடிகர்கள் அமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள லால் சிங் சத்தா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். இப்படம் ஹாலிவுட்டில் 1994ம் ஆண்டு வெளியான பாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக் என்று படக்குழு அறிவித்துள்ளது.