டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…!

Published On:

| By christopher

தமிழக அரசு கலை கல்லூரிகளில் கலந்தாய்வு!

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 5) தொடங்குகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.பி.ஏ., பி.சி.ஏ. போன்ற இளநிலை பட்டப்படிப்புகளில் உள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பப்பதிவு நடந்து முடிந்தது.

செஸ் ஒலிம்பியாட் – 7வது சுற்று ஆட்டம்!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இதுவரை 6 சுற்று நிறைவடைந்த நிலையில் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று 7வது சுற்று ஆட்டம் நடைபெறுகிறது. பெண்கள் பிரிவில் புள்ளிபட்டியலில் இந்தியா ஏ அணி 12 புள்ளிகளுடன் தனிஅணியாக முதலிடத்தில் உள்ளது.

கனமழை எதிரொலி – விடுமுறை அறிவிப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மற்றும் நீலகிரியில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. நீலகிரியில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 76ஆவது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,49,406 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 1,616 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் போராட்டம்!

விலைவாசி, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் கட்சி இன்று நடத்துகிறது. டெல்லியில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் இந்த போராட்டத்தில் பிரதமர் இல்லம் முற்றுகையிடப் போவதாக கூறப்பட்டுள்ளது.

பிரதரை சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

4 நாள் சுற்றுப்பயணாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். அப்போது ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்க கோருவார். அதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவையும் சந்திக்க உள்ளார்.

புராதன சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதி!

இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழங்கால நினைவுச்சின்னங்களை இன்று முதல் வரும் 15-ஆம் தேதி வரை மக்கள் கட்டணம் இல்லாமல் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா!

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

இன்று ரிலீசாகும் திரைப்படங்கள்!

தமிழகத்தில் இன்று துல்கர் சல்மான் நடிப்பில் சீதா ராமம், அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், பிரபுதேவா நடிப்பில் பொய்க்கால் குதிரை, வைபவ் நடிப்பில் காட்டேரி மற்றும் 6 ஹவர்ஸ் ஆகிய படங்கள் திரையங்குகளில் வெளியாகின்றன.

நீதிபதியை மாற்றக் கோரிய பன்னீர்செல்வம்:  நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share