எடப்பாடி மேல்முறையீட்டு மனு விசாரணை!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஆகஸ்ட்23 ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை- உடன்பாடு ஏற்படுமா?
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின் 7-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயிற்சி மைய வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.
ஆறுமுக சாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால நீட்டிப்பு நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அதன் விசாரணை அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி முதல்வரிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 94வது நாளாக விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஆண்கள் 351, பெண்கள் 240 என மொத்தம் 591 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 88 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35,63,913 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 696 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். அதன்படி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,20,038 ஆக உயர்ந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கோவை பயணம்!
நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக இன்று கோவை செல்கிறார். சென்னையில் இருந்து இன்று இரவு 7:00 மணிக்கு, விமானத்தில் கோவை செல்லும் முதல்வர் நாளை ஈச்சனாரியில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அதிகாரப்பூர்வ இணையதளமான http://dge.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மறுகூட்டலுக்கு வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் பல பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை ஓப்பன் கோல்ப் சாம்பியன்ஷிப் ஆரம்பம்!
மூன்றாவது சென்னை ஓபன் கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் இன்று தொடங்குகிறது. டிஎன்ஜிஎப் கோல்ப் களத்தில் ஆக. 26ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மிதுன் பெரேரா (இலங்கை), காலின் ஜோஷி, கரண்தீப் கொச்சார், மனு கந்தாஸ், அமன் ராஜ், ஷமிம் கான் உள்பட 126 பேர் பங்கேற்கின்றனர். கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்த தொடரில் விளையாட உள்ளனர். மொத்த பரிசுத் தொகையாக ரூ.40 லட்சம் வழங்கப்பட உள்ளது.
தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தனர். இதில் இந்திய அணி தரப்பில் சுப்மன் கில் 130 ரன்களுடன் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விளையாடிய ஜிம்பாவே அணி, 49.3 ஓவரில் 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது.