டாப் 10 செய்திகள்…. இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் இன்று 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசியும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

சென்னை தின கோலாகல கொண்டாட்டம்!

383வது சென்னை தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் 2 நாட்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று தொடங்கிய இந்த நிகழ்ச்சி, 2வது நாளாக பெசன்ட் நகரில் இன்று மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அதிமுக தலைமை அலுவலகம் – தொண்டர்களுக்கு அனுமதி!

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து கட்டடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைக்கவும் ஒரு மாதத்திற்கு தொண்டர்கள் வர கூடாது எனவும் கடந்த 20ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது . இந்நிலையில், நேற்றுடன் அதற்கான காலக்கெடு முடிந்ததால், இன்று முதல் அதிமுக தொண்டர்கள் அலுவலகத்தை பார்வையிட வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் இன்று 92வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 627 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 94 பேர், கோவையில் 81 பேர், செங்கல்பட்டில் 49 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 408 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 6 ஆயிரத்து 87 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அன்புமணி ராமதாஸ் நடைபயணம் நிறைவு!

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. 3 நாள் பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி 3வது நாளான இன்று கம்பைநல்லூரில் தொடங்கி பொம்மிடியில் தனது நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் நிறைவு செய்கிறார்.

எல்லை பிரச்னை குறித்து 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

மேகாலயாவுக்கும், அசாமுக்கும் இடையே 50 ஆண்டுகளாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இரு மாநிலங்களுக்கும் இடையே 884 கிமீ தொலைவிலான எல்லையில் இருக்கும் 12 இடங்களில் 6 பகுதிகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், எல்லை பிரச்னை தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று கவுகாத்தியில் நடக்கிறது. இதில், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவும், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் கலந்து கொள்கின்றனர்.

கார்சனுடன் மோதும் பிரக்ஞானந்தா!

அமெரிக்காவின் மியாமியில் நடைபெறும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறார் இந்தியாவின் பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா. புள்ளிகள் பட்டியலில் கார்ல்சன், 13 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் உள்ளார். பிரக்ஞானந்தா 12 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ள்னர். இன்று நடைபெறும் இறுதிச்சுற்றில் கார்ல்சன் – பிரக்ஞானந்தா மோதுகிறார்கள்.

தொடரை கைப்பற்றியது இந்தியா!

ஜிம்பாப்வே அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 38.1 ஓவரில் 161 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய இந்தியா 25.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

பட பூஜையுடன் தொடங்கும் சூர்யா42!

சிவா இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் 2 பாகங்களாக சூர்யா நடிக்கவுள்ள அவரது 42-வது படத்தின் பூஜை இன்று காலை சென்னை ராமாபுரத்தில் நடைபெற உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இந்தி திரையுலகின் முன்னணி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார். ஒளிப்பதிவை சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வெற்றி பழனிச்சாமி மேற்கொள்கிறார்.

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க…

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *