கொள்ளையர்களை பிடித்தால் ஒரு லட்சம் பரிசு!
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெடரல் வங்கியில் இருந்து 32 கிலோ தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை தமிழக காவல்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து தரும் காவலர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
சுதந்திர தின விழா- சென்னையில் பலத்த பாதுகாப்பு!
நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், மாநகர் முழுவதும் மொத்தம் 5,000 காவலர்கள் சிறப்பு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பதவி விலகுவதாக பாஜக சரவணன் அறிவிப்பு!
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் சென்ற வாகனம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் நேற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று இரவு அமைச்சரை பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரினார். மேலும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 85வது நாளாக விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 775 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,58,029 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,067 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,12,316 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,680 ஆக உள்ளது.
முதல் உரையை ஆற்றுகிறார் திரெளபதி முர்மு
கடந்த 25ம் தேதி குடியரசு தலைவராக பதவியேற்ற திரெளபதி முர்மு, நாட்டின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று மாலை 7 மணிக்கு உரையாற்ற உள்ளார். தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. அதன் பிறகு, இரவு 9 மணிக்கு அந்தந்த மாநில மொழிகளில் இவருடைய உரை மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதல் உரை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 4 நாட்களுக்கு மழை!
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் : ஜோ பைடன் கண்டனம்!
அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கத்தியால் குத்தப்பட்டதால் படுகாயமடைந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், நேற்று நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை அறிந்து அதிர்ச்சியும் வருத்தம் அடைந்துள்ளோம். இது ஒரு விஷ தாக்குதல். இருவரும் அனைத்து அமெரிக்கர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுடன் சேர்ந்து, அவரது உடல்நலம் மற்றும் குணமடைய பிரார்த்தனை செய்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஸ் டெய்லர் புத்தகத்தில் அதிர்ச்சி தகவல்!
ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் தன்னை அறைந்ததாக நியூஸிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தனது சுயசரிதை நூலில் தெரிவித்துள்ளார்.’பிளாக் அண்ட் ஒயிட்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் கடந்த 2011ல் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நான் டக் அவுட் ஆனபோது ‘டக் அவுட் ஆவதற்கு நாங்கள் உங்களுக்கு ஒரு மில்லியன் கொடுக்கவில்லை’ என்று கூறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர் என் முகத்தில் நான்கு முறை அறைந்தார்’ என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சிம்பு படத்தின் 2வது பாடல் வெளியீடு!
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடுகிறது. இப்படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாடல் ’மறக்குமா நெஞ்சம்’ என்ற பாடல் இன்று மாலை 6 மணி 21 நிமிடத்திற்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சிறு, குறு தொழில் தொடங்க வங்கிகள் எளிதில் கடன் தர வேண்டும்: கனிமொழி எம்.பி