மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்!
தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் 33வது கொரோனா மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெறவுள்ளது. சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த, 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு மையங்களில் இலவசமாக செலுத்தப்படுகிறது.
கலைஞரின் 4வது ஆண்டு நினைவு நாள்!
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு திமுக தலைவரும், மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவரது தலைமையில் தி.மு.க.வினர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த உள்ளனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கலைஞர் நினைவு பன்னாட்டு மாராத்தான் ஓட்டம்!
கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு, கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் ஓட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இதுவரை எந்த மாரத்தானிலும் இல்லாத அளவுக்கு 43,320 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பதிவு கட்டணமாக பெறப்பட்ட தொகை முழுவதையும் எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைக்கு வழங்கப்படும். இந்த மாரத்தானில் முதல் 3 இடங்களை பெறும் வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரொக்க பரிசுகளையும், நினைவு பரிசுகளையும் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 78 வது நாளாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
விண்ணில் பறக்க தயார்நிலையில் இஸ்ரோவின் SSLV-D1!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோவின் SSLV-D1 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த புதிய SSLV ராக்கெட்டில் இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட AzaadiSat என்ற செயற்கைகோள் கொண்டும், EOS 2 என்ற இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றையும் சேர்த்து விண்ணில் ஏவப்பட இருக்கிறது. குறிப்பாக ஆசாதி சாட் எனப்படும் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியில் 7வது நிதி ஆயோக் கூட்டம்!
நிதி ஆயோகின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இதில் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம், வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், மாற்றுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்புவகைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த இந்தியா பி அணி!
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 9-வது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஓபன் பிரிவில் நேற்று நடந்த 8-வது சுற்றில் இந்தியா ஏ அணி 1½-2½ என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவிடம் வீழ்ந்தது. இந்தியா பி அணி 3-1 என்ற புள்ளி கணக்கில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்க அணியை வீழ்த்தி வெற்றியை தன்வசப்படுத்தியது. இந்தியா சி அணி 1-3 என்ற புள்ளி கணக்கில் பெருவிடம் தோல்வி அடைந்தது. மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி பலம் வாய்ந்த உக்ரைனுடன் டிரா செய்தது. இந்தியா பி அணி 3½-½ என்ற புள்ளி கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இந்தியா சி அணி 1-3 என்ற புள்ளி கணக்கில் போலந்திடம் தோல்வி கண்டது.
தொடரை கைப்பற்றியது இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4 ஆவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 192 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால், 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி உள்ளது.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா முன்னேற்றம்!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒன்பதாவது நாளில், இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 40 பதக்கங்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் வினேஷ் போகத் மற்றும் 74 கிலோ எடை பிரிவில் நவீன்குமார் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். 10 ஆயிரம் மீட்டர் நடை ஓட்ட பந்தயத்தில் 43.38 நிமிடத்தில் இலக்கை அடைந்து இந்தியா வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி வெள்ளி வென்றார்.
திருச்சிற்றம்பலம் டிரைலர் ரிலீஸ்!
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ், அனிருத் ஆகியோர் இந்த படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ள நிலையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 7% கொரோனா தமிழகத்தில்: மத்திய அரசு எச்சரிக்கைக் கடிதம்!