டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அரசியல்

அரசு பேருந்துகளில் பார்சல் சேவை!

பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் தங்களது பார்சலை தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக அரசு பேருந்துகளில் அனுப்பும் திட்டம் இன்று (ஆகஸ்ட் 3) முதல் துவங்கியுள்ளது.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை ,கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு ஒரே நாளில் சென்றடையும் வகையில் பார்சல் சேவை திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதிசெய்வது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. இதில், ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால், உடனடியாக வேலைநிறுத்தம் தொடங்கும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை!

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் தொடர்ந்து 74-வது நாளாக இன்றும் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35,46,907 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 1,734 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

பிஎஸ் மேல்முறையீட்டு மனு – உச்சநீதிமன்றம் விசாரணை!

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டா் முறைகேடு விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெறுகிறது.

பொதுத்தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காலை 11.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த பூஜையானது நாளை அதிகாலை 5.40 மணிக்கு நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட்டில் 6வது சுற்று!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று நடந்த 5வது சுற்றில் ஓபன் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றி பெற்றது. இந்தியா சி அணி தோற்றது. மகளிர் பிரிவில் இந்திய அணி தலா ஒரு வெற்றி, தோல்வி மற்றும் டிரா செய்தன. இந்நிலையில் 6வது சுற்று ஆட்டம் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

மதுரையில் விருமன் டிரைலர் வெளியீடு!

கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் விருமன் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா, ரசிகர்கள் முன்னிலையில் இன்று மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், இயக்குனர் பாரதிராஜா, ஷங்கர், சூர்யா, சூரி, அதிதி ஷங்கர் இயக்குனர் முத்தையா, இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உட்பட படக்குழுவினர் பங்கேற்கின்றனர்.

நிர்மலா பேச்சு: கிண்டலடிக்கும் சுவாமி… கேள்வி கேட்கும் திருமா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *