டாப் 10 செய்திகள் : 234 தொகுதிகளிலும் விஜய் அன்னதானம் முதல் வெப்பம் அதிகரிப்பு வரை!

அரசியல்

234 தொகுதிகளிலும் விஜய் அன்னதானம்!
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று(மே 28) தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படவுள்ளது.

மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றிப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரண்டாவது நாளாக துணை வேந்தர்கள் மாநாடு!
தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு இரண்டாவது நாளாக இன்று உதகையில் நடைபெறுகிறது.

நேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “நான் ஆளுநராக பதவி ஏற்கும் போது தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களின் தரம் மோசமாக இருந்தது. இந்த குறைபாடுகளை சரி செய்யவே துணை வேந்தர்கள் மாநாடு” என்று கூறினார்.

மேற்கு வங்கத்தில் மோடி
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கத்துக்கு செல்லும் பிரதமர் மோடி இன்று பரசத் தொகுதியில், பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.

ஆயுஷ் ஆராய்ச்சி!
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்தியக் கவுன்சில் இன்று டெல்லியில் “ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப புதுமைக் கண்டுபிடிப்பில் மருந்து ஆராய்ச்சி” என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

பிளஸ்-2 விடைத்தாள்!
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள், விடைத்தாள் நகலை இன்று பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வண்டலூர் பூங்கா திறப்பு!
வழக்கமாக செவ்வாய்கிழமை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால், கோடை விடுமுறை இன்னும் சில நாள்களில் நிறைவடையவுள்ளதை முன்னிட்டு, பூங்காவுக்கு அதிக பார்வையாளர்கள் வரலாம் என்பதால் இன்று வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

சிறப்பு கலந்தாய்வு!
அரசு கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு  கலந்தாய்வு இன்று தொடங்கி மே 30 வரை நடைபெறுகிறது.

விவசாயிகள் போராட்டம்!
பெரியாறு அணையில் கேரள அரசு புதிய அணையை கட்ட முயற்சி எடுத்து வரும் நிலையில், அதனை தமிழக விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில், மதுரை வருமானவரித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

பெட்ரோல்-டீசல் விலை!
சென்னையில் தொடர்ந்து 73வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், டீசல் ரூ.92.34-க்கும் விற்கப்படுகிறது.

அதிகரிக்கும் வெப்பம்!
மே 4-ல் தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. எனினும், இன்று முதல் அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: கறிவேப்பிலைக் குழம்பு!

டிஜிட்டல் திண்ணை: பொன்னார், நயினார், வானதி புறக்கணிப்பு- அண்ணாமலை கூட்டத்தில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *