கொடைக்கானலில் மலர் கண்காட்சி!
கொடைக்கானலில் இன்று(மே 17) 61வது மலர்க்கண்காட்சி தொடங்குகிறது. வழக்கமாக இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த முறை பத்து நாட்கள் நடைபெறுகிறது. இதனால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
மும்பையில் மோடி – கெஜ்ரிவால்
5ஆம் கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மும்பையில் ஒரே நாளில் என்டிஏவை ஆதரித்து பிரதமர் மோடியும், இந்தியா கூட்டணியை ஆதரித்து முதல்வர் கெஜ்ரிவாலும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். இரு கூட்டணியும் தங்களது பலத்தை காட்ட தயாராகி வருகிறது.
ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு!
பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு இன்றுடன் நிறைவடைகிறது. பணியிட மாறுதல் கேட்டு 4 நாட்களில் 63 ஆயிரத்து 433 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
எங்கெங்கு மழை!
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 67ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
உயர் ரத்த அழுத்த தினம்!
உலக சுகாதார நிறுவனம் உயர் ரத்த அழுத்தம் குறித்து 2005ஆம் ஆண்டில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கிய தினம் இன்று. அந்த வகையில் ஆண்டுதோறும் மே 17ஆம் தேதி உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ராஜேஷ் தாஸ் வழக்கு!
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னதாக சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
சிறப்பு பேருந்துகள்!
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தினமான 19ஆம் தேதியை முன்னிட்டு மக்கள் அதிகளவில் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 62 ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எலக்சன் திரைப்படம்!
தமிழ் இயக்கத்தில் விஜய் குமார் நடிப்பில் எலக்சன் திருவிழா படத்தை ரீல் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படம் இன்று வெளியாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: நீரிழிவு கட்டுக்குள் வராமல் இருக்கிறதா? இதைச் செய்யுங்கள்!
கிச்சன் கீர்த்தனா : சிவப்பு அரிசி இடியாப்பம்!