இலங்கையில் அதிபர் தேர்தல்!
இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று(ஜூலை 20) நடைபெறுகிறது. தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 3 பேர் போட்டியிடுகின்றனர். டலஸ் அழகப்பெருமவுக்கு சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதிமுக அலுவலக சீல் வழக்கில் இன்று உத்தரவு!
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்குகளில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. கடந்த 11ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக வருவாய்த்துறை சீல் வைத்தது.
மத்திய அமைச்சரை சந்திக்கிறார் துரைமுருகன்
காவிரி நீர் மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க உள்ளார்.
இன்று முதல் துணைத்தேர்வு ஹால்டிக்கெட் பெறலாம்!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு துணைத்தேர்வுகள் வரும் 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் 60வது நாளாக மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 64 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
பெரியார் பல்கலை. வினாத்தாள் சர்ச்சை – விசாரணை குழு அமைப்பு!
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வின் சர்ச்சைக் கேள்வி குறித்து விசாரிக்க உயர் கல்வித்துறை இணை செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. விசாரணை குழு ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம்!
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டமன்ற அதிமுக துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் இடமாற்றம்!
மாணவி ஸ்ரீமதியின் மரணத்தை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஸ்ரவன் குமார் ஜடாவத் நியமனம். மாவட்ட எஸ்.பி. பணியிட மாற்றத்தை தொடர்ந்து, ஆட்சியரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அரிசிக்கு ஜிஎஸ்டி – நிர்மலா சீதாராமன் ட்வீட்!
பேக்கிங் செய்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பேக்கிங் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்வீட்.
நுபுர் சர்மாவை கைது செய்ய தடை!
முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதிமன்றம். மேலும் நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளை டெல்லிக்கு மாற்றுவது குறித்து மாநில அரசுகள் பதிலளிக்க கூறி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு.