எதிர்க்கட்சி துணைத் தலைவர் யார்?
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் சார்பில் வழங்கப்பட்டுள்ள கடிதங்கள் குறித்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று (அக்டோபர் 13) பரிசீலனை செய்யவுள்ளார்.
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு!
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
4-வது வந்தே பாரத் ரயில்!
டெல்லி- இமாச்சலப்பிரதேசம் இடையிலான நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தைப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 145-வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ. 94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா பாதிப்பு நிலவரம்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 302 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 280 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 4,346 ஆக உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆஜர்!
உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவுப்படி பணப்பலன் வழங்காததை எதிர்த்து ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் இன்று நேரில் ஆஜராகச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் ஆஸ்கர் திரைப்படம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குச் சிறார் திரைப்படங்கள் மாதந்தோறும் 2-வது வாரம் திரையிடப்படுகின்றன.
அதன்படி, பிரெஞ்சு மொழியில் ஆஸ்கர் விருது பெற்ற தி ரெட் பலூன் திரைப்படம் இன்று திரையிடப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்!
சென்னை, மாதவரம் பால் பண்ணை அருகில் இன்று காலை 11.45 மணியளவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம், இரண்டாம் கட்டத்தின் வழித்தடம்-3ன், சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
ஹாசனாம்பா கோவில் நடை திறப்பு!
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா தேவி கோவில் உள்ளது. இந்த கோவில் ஆண்டுக்கு ஒருமுறை அதாவது தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாட்களுக்கு மேல் நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படும். அதன்படி இன்று முதல் 27ஆம் தேதி வரை ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணி கேப்டன்?
கேப்டனாக இருந்த ஆரோன் பிஞ்ச், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் நியமிப்பது குறித்த முக்கிய முடிவு இன்று எடுக்கப்பட உள்ளது.
கோவா அணியில் ஜொலிக்கும் டெண்டுல்கர் மகன்!
நிலப் பிரச்சனையைப் பேசும் காந்தாரா: வெளியானது மிரட்டல் ட்ரெய்லர்!