டாப் 10 நியூஸ் : ஆளுநருக்கு எதிராக போராட்டம் முதல் 14 மாவட்டங்களில் கனமழை வரை!
ஆளுநருக்கு எதிராக போராட்டம்!
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தையைப் புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘திராவிடநல் திருநாடு’ என்ற வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று (அக்டோபர் 19) காலை 10 மணிக்கு ராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் நடைபெறுகிறது.
14 மாவட்டங்களில் கனமழை!
தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
இன்று விடுமுறை!
கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மீன் அங்காடியில் மட்டுமே விற்க உத்தரவு!
மெரினா லூப் சாலையில் கட்டப்பட்டுள்ள நவீன மீன் அங்காடியில் மட்டுமே இன்று காலை முதல் மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது!
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக www.passportindia.gov.in என்ற பாஸ்போர்ட் இணையதள சேவை இன்று இரவு 7 மணி முதல் 21ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீர் முகாம்!
பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஊர் மாற்றம் செய்து கொள்ளலாம்.
‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ திறப்பு!
மழை காரணமாக 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ‘கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ இன்று முதல் வழக்கம்போல் இயங்கும்.
போஸ் வெங்கட் தாயார் மறைவு!
நடிகர் மற்றும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் Sir படம் நேற்று வெளியான நிலையில், அவரது தாயார் ராஜாமணி, வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது இறுதி சடங்குகள் சொந்த ஊரான அறந்தாங்கியில் இன்று நடைபெற உள்ளது.
பின்னடைவில் இந்திய அணி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 125 ரன்கள் பின்னடைவுடன் இன்று நான்காவது நாள் ஆட்டத்தை இந்திய அணி விளையாட உள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 216ஆவது நாளாக விலையில் மாற்றம் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும் , டீசல் ரூ.92.34க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மாப்பிள்ளை சம்பா அதிரசம்