அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (நவம்பர் 6) காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவுகள் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கி உள்ளது.
விழுப்புரத்தில் உதயநிதி ஆய்வு!
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்!
தெலங்கானா மாநிலத்தில் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கப்படவுள்ளது. இந்த பணியானது, வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, அதன் அறிக்கைகள் பொதுத் தளத்தில் பதிவேற்றப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்துக் கொள்ளலாம்.
பள்ளிகளுக்கு விடுமுறை!
சிக்கல் சிங்காரவேலர் தேரோட்டம் மற்றும் வேல் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் போக்குவரத்து மாற்றம்!
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக இன்றும் நாளையும் திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!
35-வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லியில் உள்ள அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
புதிய மின்சார ரயில் அறிமுகம்!
ஆவடி- சென்னை சென்ட்ரலுக்கு புதிய மின்சார ரயில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுதவிர, சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் மெமு ரயிலின் பெட்டிகளும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…