ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி!
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று (ஜனவரி 4) நடைபெறுகிறது.
டெல்லியில் விவசாயிகள் பிரமாண்ட கூட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினர் இன்று கானௌரி எல்லையில் ’கிஷான் மஹாபஞ்சாயத்து’ எனும் பெயரில் பிரமாண்ட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் கடந்த 37 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் பேச உள்ளார்.
YESCON-2025 மாநாடு தொடக்கம்!
இரு நாட்கள் நடைபெறும் இளம் தொழில் முனைவோர் மையம் YES(Young Entrepreneur school)சார்பில் YESCON-2025 மாநாட்டினை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
திருச்சி என்.ஐ.டி-யில் டாக்டர் வீரமுத்துவேல்
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் உலகளாவிய முன்னாள் மாணவர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் என். சந்திரசேகரன், டாக்டர் பழனிவேல் தியாகராஜன், டாக்டர் வீரமுத்துவேல், டி.வி.நரேந்திரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் இயக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் வசதிக்காகவும் திருச்சி – தாம்பரம், தாம்பரம் – திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது.
அசையா சொத்துகள் கண்காட்சி!
தருமபுரி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சார்பில் வங்கிகளால் கையகப்படுத்தப்பட்ட அசையா சொத்துகளின் கண்காட்சி இன்றும் நாளையும் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது.
ஆருத்ரா தரிசனம் திருவிழா தொடக்கம்!
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா இன்று காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.
’Its Breakup da’ பாடல் ரிலீஸ்!
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் அடுத்த பாடலான ’Its Breakup da’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
மிதமான மழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை உருவானதால் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…