காங்கிரசை ஆதரித்து கெஜ்ரிவால் பிரச்சாரம்!
மக்களவைத் தேர்தலில் டெல்லியில் போட்டியிடும் மூன்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மே 15) பிரச்சாரம் செய்கிறார். முன்னதாக அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அவருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
மோடி வாகன பேரணி!
மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட 13 தொகுதிகளுக்கு வருகிற 20ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் பகுதியில் இருந்து காந்தி நகர் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு பிரதமர் மோடி வாகன பேரணி நடத்துகிறார்.
செந்தில் பாலாஜி வழக்கு!
சட்டவிரோத பண மோசடி சட்டத்தில் கைது செய்யப்பட்டு 11 மாதங்களாக சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
குரூப் 2 கலந்தாய்வு!
குரூப்-2 பதவிகளில் நேர்முக எழுத்தர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி தவிர மற்ற பதவிகளுக்கான அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று மே 15ஆம் தேதி முதல் ஜூன் 20-ம் தேதி வரையில் சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ஐபிஎல் அப்டேட்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் 65ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
பிளஸ் 1 மறுகூட்டல்!
பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 91.17% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
பெட்ரோல் டீசல் விலை!
பெட்ரோல் விலை 60 ஆவது நாளாக இன்றும் எந்த மாற்றமின்றி ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 92.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
எங்கெங்கு மழை!
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பம் குறையும்!
மே 15 முதல் 18 வரை தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும். கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பையொட்டி இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உதவி பேராசிரியர்கள் பணி – கடைசித் தேதி!
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள் : மோடி வாகன பேரணி முதல் செந்தில் பாலாஜி வழக்கு வரை!
ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு…. அதிகரிக்கும் கார்ப்பரேட் காதல் – கே.ராஜன் காட்டம்!