கலைஞர் நாணயம் வெளியீட்டு விழா!
சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 18) நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு விழாவில் அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது.
ராஜ்நாத் சிங் சென்னை வருகிறார்!
சென்னையில் கடலோர காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய புதிய கட்டடம் திறப்பு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று சென்னை வருகிறார்.
12 மாவட்டங்களில் இன்று கனமழை!
தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து மாற்றம்:
கலைஞர் நாணய வெளியீட்டு விழா நடைபெற இருப்பதால், வாலாஜா சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, போர் நினைவுச் சின்னம், கொடிப் பணியாளர் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வணிக வாகனங்கள் அனுமதிக்கப்படாது என மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆற்காடு சுரேஷின் நினைவு நாள்!
ஆற்காடு சுரேஷின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!
பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
எழும்பூரில் இருந்து மின்சார ரயில்!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் இன்று எழும்பூரில் இருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய சங்க தலைவர் மணிமண்டபத் திறப்பு விழா!
விவசாயிகளின் போராளி எனப்படும் முன்னாள் விவசாய சங்க தலைவர் என்.எஸ். பழனிசாமியின் மணிமண்டபத் திறப்பு விழா பல்லடம் அருகே இன்று நடைபெறுகிறது.
விடாமுயற்சி அப்டேட் வெளியாகிறது!
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட் இன்று மதியம் 1.09 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 154-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: சுவையான மீன் பிரியாணியும் அதற்கேற்ற ஏற்ற மீனும்…
இனிமேல் காந்திய பாதை தான்… அப்டேட் குமாரு