ஃபார்முலா 4 கார் பந்தயம்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாட்டில் இந்தியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் இன்றும் (ஆகஸ்ட் 31), நாளையும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டிற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்!
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இன்று காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ரேசன் கடைகள் இயங்கும்!
ஆகஸ்ட் 31ம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
நெல்லையில் பிரம்மாண்ட மாநாடு!
நெல்லை மாநகர ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் இன்று ‘பெற்றோரை கொண்டாடுவோம்’ பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இதில் சபாநாயகர் அப்பாவு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீயா நானா பிரபலம் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
1,105 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சென்னை உள்பட முக்கிய நகரங்களில் இருந்து இன்றும், நாளையும் 1,105 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்சார ரயில் சேவை ரத்து!
அரக்கோணம் பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணி நடைபெறுவதால், சென்னையில் இன்று (ஆகஸ்ட் 31) சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
GOAT படத்தின் நான்காவது சிங்கிள் ரிலீஸ்!
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் நடிகர் விஜயின் GOAT படத்தின் நான்காவது சிங்கிளாக “மட்ட” என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது.
மெய்யழகன் பட பாடல் வெளியீட்டு விழா!
நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோவை கொடிசியா ஹாலில் நடைபெறுகிறது.
8 மாவட்டங்களில் கனமழை!
தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று 167வது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ராஜ்கிரா பர்ஃபி
முதலீட்டாளர்களுக்கு ஸ்டாலின் கொடுத்த கிஃப்ட் பாக்ஸில் இருப்பது என்ன?