மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
அரசு மருத்துவர் மீதான கத்திக் குத்து தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் அவசர சிகிச்சையைத் தவிர்த்து அனைத்து விதமான மருத்துவ சேவைகளையும் நிறுத்தி இன்று (நவம்பர் 14) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்!
இலங்கையின் 17-வது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இன்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்த சற்று நேரத்திலேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
21 மாவட்டங்களில் கனமழை!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்த நிலையில், இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கஸ்தூரி வழக்கில் தீர்ப்பு!
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளிக்கிறது.
பாம்பன் பாலத்தில் ஆய்வு!
ராமேஸ்வரம் பாம்பன் பாக் ஜலசந்தி கடலில் ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி இன்று இறுதி ஆய்வு மேற்கொள்கிறார்.
மீன்வள முதலீட்டாளர்கள் மாநாடு!
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை சார்பில், “அந்தமான் -நிக்கோபார் தீவுகளின் மீன்வளம், நீர்வாழ் உயிரினத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் 2024” என்ற முதலீட்டாளர்கள் மாநாடு இன்று அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நடைபெறுகிறது.
கங்குவா ரிலீஸ்!
இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படம் பல்வேறு மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் உலகம் முழுவதும் சுமார் 11,500 திரைகளில் இன்று வெளியாகிறது.
கால்பந்து போட்டியால் பதற்றம்!
பாலஸ்தீன ஆதரவாளர்கள் முற்றுகையிடக் கூடும் என்பதால் பாரீசில் இன்று நடக்கவுள்ள, பிரான்ஸ் – இஸ்ரேல் இடையிலான, யுஇஎப்ஏ நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டிக்கு 4,000 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ஆஸி?
ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.80-க்கும், டீசல் 92.39ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…