புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு!
இந்தியாவின் 51வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று (நவம்பர் 11) பதவியேற்கிறார். ராஷ்டிரபதி பவனில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
அதிமுக ‘கள ஆய்வுக்குழு’ கூட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 10 பேர் கொண்ட ‘கள ஆய்வுக்குழு’ ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும்!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்று குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்பு!
கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பால் விலை உயர்வு?
தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கக் கூடிய ஆரோக்யா நிறுவனம் இன்று முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரச்சாரம் நிறைவு!
இலங்கையில் வரும் நவம்பர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
டெல்லி கணேஷ் உடல் தகனம்!
சென்னை ராமாபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் இன்று காலை 10 மணியளவில் தகனம் செய்யப்படுகிறது.
செய்தியாளர்களை சந்திக்கும் கம்பீர்
இந்திய அணியின் இரண்டாவது பேட்ச் இன்று ஆஸ்திரேலியா செல்லும் நிலையில், காலை 9 மணியளவில் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.
பயிற்சியாளர் ஆனார் லோகன்
பிரான்சில் இருந்து புதுச்சேரிக்கு வந்துள்ள கால்பந்து வீரர் லோகன், இன்று புதுச்சேரி அலையன் பிரான்ஸே அருகே பள்ளி கால்பந்து வீரர்களுக்கு Freestyle முறையை இலவசமாக கற்றுக்கொடுக்க உள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகி வருகிறது.