மாலை நேர உழவர் சந்தைகள்!
தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பின்படி இன்று (ஆகஸ்ட் 12) முதல் மாவட்டத்துக்கு ஒரு உழவர் சந்தை வீதம் சென்னை தவிர 37 இடங்களில் தினமும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்!
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
பால் விலை உயர்வு!
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்கிறது. இதற்குத் தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாகச் சென்னையில் 178 பேர், கோவையில் 101 பேர், செங்கல்பட்டில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 35,55,538ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,033ஆக உள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் இன்று 83வது நாளாக விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.
உணவுத் திருவிழா, கிராமிய நிகழ்ச்சிகள்!
சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 14 வரை மூன்று நாட்களுக்கு உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. மெட்ரோ நிர்வாகம் சார்பில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கிராமிய நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
புதிய ஸ்கார்பியோ கிளாசிக் கார்!
புதிய ஸ்கார்பியோ கிளாசிக் கார், பொது பார்வைக்கு இன்று காலை 11.30 மணிக்கு கொண்டு வரப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்ததாக சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவுள்ளது.
இன்றைய பட ரிலீஸ்!
சாய் பல்லவி நடித்த கார்கி படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘சபாஷ் மிது’ படமும் இன்று வெளியாகிறது. அறிமுக இயக்குநர் அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்தில் அமலாபால் தடயவியல் நிபுணராக நடித்துள்ள கடாவர் படமும் இன்று வெளியாகிறது.
இலவச வேட்டி திட்டம் தொடரும்!
தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார். விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இவ்வாறு அறிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்!
பிகாரில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் வரும் 24ஆம் தேதி கூடும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் புதிதாக பொறுப்பேற்ற ஜே.டி.யு. – ஆர்.ஜே.டி. கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.
கிராமிய நிகழ்ச்சிகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடும் மெட்ரோ!