டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

Published On:

| By Kavi

கருப்புப் பண வழக்கு : இன்று விசாரணை!

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் 2009ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.

மறைந்த மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வழக்குத் தொடர்ந்தார். 2016ஆம் ஆண்டு இந்த வழக்கில் கடைசியாக விசாரணை நடைபெற்ற நிலையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று( ஆகஸ்ட் 30) விசாரணைக்கு வருகிறது.

எஸ்.பி.வேலுமணி தலைமையில் போராட்டம்!

வனப் பகுதிவாழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும் கண்டனப் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் இன்று நீலகிரியில் நடத்தப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இந்த போராட்டம் காலை 11 மணிக்குத் தொடங்குகிறது.

மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்!

அத்தியாவசிய பொருட்களின் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் இன்று காலை 10 மணிக்கு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை – அன்புமணி போராட்டம்!

தமிழக அரசின் அனுமதி இன்றி கொசஸ்தலை ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டவுள்ளது. இதனை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு நகரில் காலை 11 மணிக்கு பாமக சார்பில் அறப்போராட்டம் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

கெஜ்ரிவால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்த எந்தவொரு எம்எல்ஏவும் பாஜகவுக்குச் செல்லவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். நேற்றே வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடும் அமளி காரணமாகப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை – வழக்கு விசாரணை!

சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உச்ச நீதிமன்ற கிளைகள் அமைக்கக் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.

கொரோனா அப்டேட்!

தமிழகத்தில் நேற்று 512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 35,67,672ஆக அதிகரித்துள்ளது. 575 பேர் மருத்துவமனையிலிருந்து நேற்று வீடு திரும்பினர். ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை!

சென்னையில் இன்று 101ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கும் விற்பனையாகிறது.

ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் மோதல்!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

முதல்வர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு!

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மாநாடு முதலமைச்சரின் டெல்லி பயணத்தின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமதி மரணம்: மின்னம்பலம் புலனாய்வை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share