அதிமுக பொதுக்குழு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 17) சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இவ்வழக்கை ஆகஸ்ட் 10, 11ஆம் தேதிகளில் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
பிரதமரைச் சந்திக்கும் முதல்வர்!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் 2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். இன்று குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். பிரதமர் மோடியிடம் தமிழகத்தின் கோரிக்கை மனுவை வழங்குகிறார்.
88ஆவது நாளாக மாற்றமில்லை!
சென்னையில் 88ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 670 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் புதிதாக 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 35,58,788ஆக உள்ளது.
துணைவேந்தர்கள் மாநாடு!
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இன்று துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முதல்வரின் டெல்லி பயணத்தின் காரணமாக இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆவணித் திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சபரிமலையில் இன்று நடைதிறக்கப்பட்டு வரும் 21ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்கும் இனி ஆதார் கட்டாயம்!
அரசாங்க மானியங்கள் மற்றும் சலுகைகளைப் பெற இனி ஆதார் எண் அல்லது அதற்காகப் பதிவு செய்த சீட்டை வைத்திருக்க வேண்டும் என்று இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை!
காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விடுமுறை அளிக்கும் அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விருமன் வெற்றி விழாவில் சூர்யா பேச்சு!
கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் வெளியான விருமன் பட வெற்றி விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, “இங்கே ஒரு பெண் ஜெயிக்க வேண்டும் என்றால் 10 மடங்கு கஷ்டப்பட வேண்டும். நிறைய விஷயங்களை அவர்கள் தியாகம் செய்கிறார்கள்” என்று உருக்கமாகப் பேசினார்.
இலவசங்கள் வழக்கு விசாரணை!
அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருப்ப சாமிய வேண்டிக்கங்க : தீர்ப்புக்கு முன் ஓபிஎஸ் முக்கிய ஆலோசனை!