முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று (ஆகஸ்ட் 16) டெல்லி புறப்படுகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டதற்காக பிரதமரைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார். புதிய குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவைச் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்க உள்ளார்.
டாஸ்மாக் மது விற்பனை 274 கோடி!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று முந்தைய நாள் மட்டும் ரூ.274 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் தரவரிசை பட்டியல்!
பொறியியல் படிப்புகளில் சேருவதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – தவாக போராட்டம்!
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் வள்ளுவர் கோட்டத்தில் காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
டெங்கு தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம்!
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் மழைக்கால நோய்கள், டெங்கு தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் காலை 9 மணிக்கு இன்று தொடங்குகிறது.
கொரோனா அப்டேட்!
தமிழகத்தில் 703 பேருக்குப் புதிதான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மொத்தம் 19 மாவட்டங்களில் உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு, 35,58,788ஆக உள்ளது. இதுவரை தமிழகத்தில் 38,033 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இன்று முதல் 3 நாட்களுக்குக் கன மழை!
தமிழகப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 1 லிட்டர் ரூ.94.24 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பீகாரில் இன்று அமைச்சர்கள் பதவியேற்பு
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜக கூட்டணியிலிருந்து விலகி தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தது. இந்நிலையில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 16 பேர் அமைச்சரவையில் இடம் பெறவுள்ளனர்.
ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன்!
தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 தொடரில் ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஃபாப் டு பிளெஸ்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2023 ஜனவரியில் இந்த டி20 தொடர் நடக்கவுள்ளது. பயிற்சியாளராக ஸ்டீபன் பிளெமிங் செயல்பட இருக்கிறார்.