போராடும் பாமக: ஸ்டாலின் சார்பில் துரைமுருகன் தூது!  

அரசியல்

பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்  (என்.எல்.சி.) இரண்டாவது சுரங்க  விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதில் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பாமக  நாளை (மார்ச் 11)  கடலூர் மாவட்டத்தில் பந்த் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 10) திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களான  கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் , திருமாவளவன், வேல்முருகன் ஆகியோர் என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார்கள்.

 “என்.எல்.சி.க்காக நிலம் கையகப்படுத்துவதில் மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அரசு ஏற்கனவே  உயரதிகாரிகள், கலெக்டர் அளவில் நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அது போதாது. முதலமைச்சரான நீங்களே நேரடியாக என்.எல்.சி. சேர்மனை அழைத்துப் பேச வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலினும் இதுகுறித்து பிரதமர் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.

மார்ச் 11 ஆம் தேதி என்.எல்.சி. நில கையகப்படுத்துதல் தொடர்பாக பாமக பந்த் அறிவித்துள்ள நிலையில் மார்ச் 10 ஆம் தேதி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் அம்மாவட்ட அமைச்சர்களான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் உள்ளிட்டோரோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதலமைச்சர். 

சென்னையில் இப்படி என்றால் கடலூரில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தாலும், இன்னொரு பக்கம் திமுக தலைமை மூத்த அமைச்சர் ஒருவரை பாமக தலைவரிடம் சமரசம் பேச தூது அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

என் எல் சி  நிறுவனத்தின் மின்சார உற்பத்திக்கு நிலக்கரி அவசரமாக தேவைப்படுவதால், சுரங்கத்துக்காக  விவசாயிகளின் நிலங்களையும் வீடுகளையும் எடுக்கக்கூடிய நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நாளுக்கு நாள்  குறைந்து வருகிறது. அதனால் புவனகிரி தொகுதி மற்றும் விருத்தாசலம் தொகுதிக்கு உட்பட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை எடுக்க வருடக் கணக்கில் போராடி வருகிறது என் எல் சி. 

ஏக்கருக்கு 25 லட்சம் கொடுக்க என் எல் சி நிறுவனம் முன் வந்திருந்தாலும் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்தப் பின்னணியில்தான்   சில நாட்களாக கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உதவியுடன் நிலங்களை கையகப்படுத்தி வேலி அமைத்து வருகிறது என் எல் சி நிறுவனம்.

இதை எதிர்த்து   மார்ச் 11ஆம் தேதி கடலூர் மாவட்டத்திற்கும் மட்டும் பந்த் அறிவித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி.  மேலும் பந்த் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ‘ஒரு கடை கூட திறந்திருக்கக்கூடாது, பஸ் ஓடக் கூடாது’ என பாமக நிர்வாகிகளுக்கு அன்புமணி உத்தரவு போட்டுள்ளதாக சொல்கிறார்கள் பாமகவினர். 

’பாமக பந்த் நடத்தினால் விசிகவினர் கடைகளை திறப்பார்கள்.  பேருந்துகள் மற்றும் வாகனங்களை இயக்குவார்கள்.  தேவை இல்லாமல் கலவரத்திற்கு வழி வகுக்கும்’ என்ற தகவல்களும் முதல்வருக்கு சென்றுள்ளன. இதையடுத்து  முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர் துரைமுருகனை, பாமக தலைமையிடம் பேச சொல்லியுள்ளார். இன்னொரு பக்கம் போலீஸ் அதிகாரிகளும்  அன்புமணி, ஜி.கே.மணி ஆகியோரிடம்  பேசி வருவதாக சொல்கிறார்கள் காவல் துறை வட்டாரத்தில்.

அரசியல் ரீதியாக இப்படி சில முயற்சிகள் நடந்தாலும் துறை ரீதியாக காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்த பெரும் படையை கடலூரில் குவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம் டிஐஜி பாண்டியன், காஞ்சிபுரம் டிஐஜி பகலவன், 10 எஸ் பி, 15 டி எஸ் பி, 7 ஏ டி எஸ் பி, இன்ஸ்பெக்டர், எஸ் ஐ, சிறப்பு எஸ் ஐ, ஏ ஆர் போலீஸ் மற்றும் உள்ளூர் போலீஸ் உட்பட சுமார் 2500 போலீஸார்  பாதுகாப்புக்காக இன்று மாலை முதலே கடலூர் மாவட்டத்தில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமக கடலூர் மாவட்ட நிர்வாகிகளை இன்று இரவே கைது செய்யவும் தீவிரமாகியுள்ளது போலீஸ்.

-வணங்காமுடி 

”அன்று ஒரு கோடி, இன்று 25 லட்சம்” கைதான அதிமுக எம்.எல்.ஏ.காட்டம்! 

’திறனற்ற எடப்பாடி’ : மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்

+1
0
+1
0
+1
0
+1
8
+1
1
+1
0
+1
0

1 thought on “போராடும் பாமக: ஸ்டாலின் சார்பில் துரைமுருகன் தூது!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *