சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு

அரசியல்

சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவிகிதம் வரை குறைக்கப்போவதாக மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளதாக தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

வேலூர் அரசினர் தொழிற் பயிற்சி வளாகத்தில் தொழிற்சாலைகளின் தொழில்நுட்பத்திற்கு ஏற்ற பயிற்சி பணிமனை கட்டுமானப் பணிகள் ரூ.3.73 கோடியில் நடைபெற்று வருகிறது.

இதனை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,

”தமிழகத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்க வசதியாக 69 ஐ.டி.ஐ.க்களை மேம்படுத்த ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பணிகள் அனைத்தையும் வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளேன்.

வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள அரசினர் ஐடிஐ 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 12 தொழிற்பிரிவுகள் உள்ளன. புதிதாக இரண்டு தொழிற் பிரிவுகள் கொண்டு வர வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கிராம சாலைகளை மாநில நெடுஞ்சாலை தரத்துக்கு இணையாக தரம் உயர்த்த ரூ.2,200 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தேவையில்லாத சுங்கச்சாவடியை மூட வேண்டும் என்பதில் அரசுக்கு விருப்பம்தான். அதற்கான முயற்சியைத் தொடர்ந்து எடுத்து வருகிறோம். பெங்களூருவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கூட்டத்திலும் அதை வலியுறுத்தினேன்.

60 கி.மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி இருக்க முறைப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இதுகுறித்து நாங்கள் ஆய்வு நடத்தி அறிக்கையும் அளித்துள்ளோம். நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் மூலம் கடிதமும் எழுதப்பட்டது. 

இதன் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்த பதிலில் சுங்கச்சாவடி கட்டணம் 40 சதவிகிதம் குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வேலூர் சுற்றுச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதனை திமுக ஆட்சியில் விரைவுப்படுத்தி உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

-ராஜ்

சின்ன பொடியன் எனக்கு தம்பி மாதிரி… கமலாலயத்தை உலுக்கும் ’கரகாட்டக்காரன்’

கால்பந்து உலகக்கோப்பை: கானாவை வீழ்த்திய போர்ச்சுகல்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *