கூட்டாட்சியை உருவாக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

அரசியல்

“கூட்டாட்சியை உருவாக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது தேசிய மாநாடு விஜயவாடாவில் நடைபெற உள்ளது. இதையொட்டி 4 நாள் நடைபெறும் கேரள மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று(செப்டம்பர் 30) தொடங்கியது.

இதையொட்டி இன்று (அக்டோபர் 1) மாலை நடைபெற்ற கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்த கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் அதுல்குமார் அஞ்சான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், “1967ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின்போது திமுகவுடன் இருந்த கட்சி இந்திய கம்யூனிஸ்ட்.

திராவிட இயக்கம் உருவாகவில்லை எனறால், நான் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்தான் இருந்திருப்பேன் என்றவர், கலைஞர் அதன் மனப்பூர்வ அடையாளமாக எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார்.

நாம் ஒரே கொள்கையைக் கொண்டிருப்பதால்தான் தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

இது கேரளாவில் நடைபெறக்கூடிய மாநாடாக இருந்தாலும், இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி உருவாக வேண்டும் என்பதும் மாநிலத்தில் சுயாட்சி மலர வேண்டும் என்பதும் இந்தியா முழுமைக்குமான கருத்தியல்.

today kerala cpi conference

ஜி.எஸ்.டி. மூலமாக மாநிலங்களின் வளர்ச்சி உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு மூலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் மாநில அரசு நினைக்கும் கல்வி முறையை நடைமுறைப்படுத்த முடியாமல் ஒன்றிய அரசு தடுக்கிறார்கள். கல்வி கற்றால் தன்னால் தகுதி வந்துவிடும்; தகுதியிருந்தால்தான் நீ படிக்கவே வர முடியும் என்பது ஏமாற்று வேலை.

பழமைவாத கருத்துகளுக்கு முலாம் பூசக்கூடிய வேலை. தேசியக் கல்விக்கொள்கை என்பது பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. அதனைக் காவிக் கொள்கையாக இந்தி மொழியை திணிக்கும் கொள்கையாக வடிவமைக்கிறார்கள்.

இதை தடுக்க முழக்கமிடுவது அரசியல் முழக்கம் மட்டுமல்ல, மாநிலங்களைக் காப்பாற்ற வேண்டிய முழக்கமாகவும் இருக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே மொழி என எல்லாவற்றையும் கோரஸ் பாடுகிறார்கள்.

இப்படியே போனால் ஒரே கட்சி என்றாகி விடும். ஒரே கட்சியென்றானால், ஒரே ஆள் என்றாகிவிடும். இதைவிட ஆபத்து வேறெதுவும் இருக்க முடியாது. ஒரே கட்சியினர் என்றாகுமானால் பாஜகவினருக்கு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

ஆனால், ஒரே ஆள் என்றாகும்போது, நம்முடன் இணைந்து பாஜகவினரும் எதிர்க்கத்தான் வேண்டும். இத்தகைய எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்தான் மாநிலத்திலே சுயாட்சி; மத்தியிலே கூட்டாட்சி.

இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால், இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்களைக் காப்பாற்றுவது என்பது மாநில மொழிகளைக் காப்பாற்றுவது ஆகும்.

இதற்காக, தமிழ்நாடு, கேரளா மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களும் எதிர்க்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

தென்னகத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து ஒலிக்கக்கூடிய இந்த ஒற்றுமைக் குரல், இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் காலம் இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சியை உருவாக்கும்” என்றார்.

ஜெ.பிரகாஷ்

அதிரடி பெண் எம்.பி.யின் கலக்கல் நடனம்!

மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *