அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதை திமுக அரசு தாமதப்படுத்துவதாக ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று முன்தினம் 2023 ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டது.
அதில் பத்து தேர்வுகள் மூலம் 1754 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு குறித்து அதில் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று (டிசம்பர் 17) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கொரோனா பாதிப்பு காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பினை உயர்த்தியது.
ஆனாலும் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மெத்தன போக்கை தொடர்ந்து திமுக அரசு கடைபிடித்து வருகிறது.
காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் வயது வரம்பை உயர்த்துவது என்பது சிகிச்சையே அளிக்காமல் நோயாளியை மருத்துவமனையில் வைத்திருப்பதற்கு சமமாகும்.
ஆட்சிக்கு வந்தால், மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது.

வாக்குறுதி என்பது ஐந்தாண்டுகளுக்கு என்ற திமுகவின் கணக்குப்படி பார்த்தாலும் மூன்றரை லட்சம் காலிப்பணியிடங்களை ஐந்தாண்டுகளில் நிரப்ப வேண்டுமானால் ஒரு ஆண்டுக்கு 70 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பத்தாயிரம் காலி பணியிடங்கள் கூட நிரப்பியதாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் டிஎன்பிஎஸ்சி திட்ட அறிக்கையை சுட்டிக்காட்டி உள்ள பன்னீர்செல்வம்,
“ஐந்து ஆண்டுகளில் மூன்று லட்சம் அல்ல முப்பதாயிரம் பணியிடங்களை கூட திமுக அரசால் நிரப்ப முடியாது. இது திராவிட மாடல் அரசு அல்ல திராபை மாடல் அரசு. அதாவது எதற்கும் உபயோகமில்லாத பயனற்ற அரசு.
தமிழகத்தில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த குரூப் 4, குரூப் 2, குரூப் 2ஏ ஆகியவற்றின் தேர்வுகளை 2023 ஆம் ஆண்டு நடத்தாமல் காலம் தாழ்த்துவது இந்த அரசு எதோ உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்று சந்தேகம் எழுகிறது.
நிதிநிலை அறிக்கையில் நிதி பற்றாக்குறை குறைந்துவிட்டது, வருவாய் பற்றாக்குறை குறைந்துவிட்டது என்று சொல்வதற்கு இதுபோன்ற காலம் தாழ்த்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டு இருக்கிறதோ என்ற சந்தேகமும், வெளிமுகமையின் மூலமாக பணிகளை மேற்கொண்டு விடலாம் என்ற நிலையில் அரசு இருக்கிறதோ என்று ஐயமும் இளைஞர்கள் மனதில் மேலோங்கி இருக்கிறது.
இரண்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி ஏமாற்று வேலை.
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கி நல திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பினால் தான் அரசால் நன்கு செயல்பட முடியும்.
எனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, காலி பணியிடங்களை நிரப்ப ஏதுவாக இனி இருக்கின்ற மூன்றரை ஆண்டுகளில் ஆண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்.
2023 ஆம் ஆண்டிற்கான அரசு பணி தேர்வுகள் அட்டவணையை தற்போதுள்ள காலி பணியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரியா
“குறுகிய பார்வை” : தீபிகா ஆடை சர்ச்சை குறித்து ஷாருக்
தொடையில் காயம்: இறுதிப்போட்டியில் ஆடுவாரா மெஸ்ஸி?