பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் (TANSA) கூறியுள்ளது.
கடந்த ஜூலை 22 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், கைம்பெண் ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆந்திராவில் சில முடிவுகள் எடுத்துள்ளனர். மத்திய அரசு குழு ஒன்றையும் அமைத்திருக்கிறது.
இவற்றை எல்லாம் ஆராய்ந்து, தமிழகத்திற்கு பொருத்தமானதை ஆலோசித்து, முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்வோம் என்று கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிருப்தி கிளம்பிய நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் (TANSA) கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 22ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பதில் அளித்தார்.
அப்போது, “ஏற்கனவே ஒன்றிய அரசு சோமநாதன் தலைமையில் ஒரு கமிட்டியை போட்டிருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் சில முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு இவற்றை எல்லாம் ஆய்வு செய்யக்கூடிய நிலைமையில் இருக்கிறது.
இவற்றையெல்லாம் ஆய்வு செய்து, எது நமக்கு பொருத்தமாக இருக்கும் என்பதையெல்லாம் கலந்தாலோசித்து, அதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பேசிதான் முடிவு சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.
தமிழக அரசு தற்போது வரை, ஓய்வூதிய நிதிஒழுங்கு முறைக் குழுமத்துடன் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை.
மாநில உரிமைகளில் மத்திய அரசோ, அண்டை மாநிலமோ தலையிட முடியாது. நிதியமைச்சர் கருத்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தான் பொறுப்பேற்ற நாள் முதல் கனிவுடன் கேட்டறிந்து அதற்கு தீர்வும் கண்டுவரும் நிதி அமைச்சர், மேற்சொன்ன அம்சங்களை ஆய்வு செய்து,
தேர்தல் கால வாக்குறுதியான மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு,
ஒன்றிய அரசின் குழுவிற்கும், ஆந்திர மாநில அரசின் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்