தோனியைப் போன்ற பலநூறு வீரர்களை உருவாக்குவதே நோக்கம்: முதல்வர்

அரசியல் விளையாட்டு

தோனியைப் போன்று பலநூறு வீரர்களை உருவாக்கவே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அறக்கட்டளை மற்றும் முதலமைச்சர் கோப்பை போட்டிகளின் தொடக்க விழா மற்றும் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (மே 8) நடைபெற்றது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கோப்பைக்கான இலச்சினை, சின்னம், கருப்பொருள் பாடலை வெளியிட்டார். 

tn will make players like dhoni

முதலமைச்சர் கோப்பை போட்டிகளுக்கான இலச்சினையாக ‘வீரன்’ என்ற பெயருடன் நீலகிரி வரையாடை கொண்ட வடிவமைப்பு வெளியிடப்பட்டது.

முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பை

தொடந்து விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையுரையாற்றினார் . அவர் பேசுகையில், “விளையாட்டு என்பது தனிமனிதனின் திறமை மட்டும் இல்லை. சமூகத்தின் கூட்டு பலத்தைப் பயன்படுத்துவதற்கும். தனிமனித சிறப்பை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டு ஒரு சிறந்த களம். 

அதனால்தான் விளையாட்டு வீரர்களுக்கு திறன் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், உடல்தகுதி. தலைமைத் தகுதி, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உருவாக்கித் தருவதை தமிழ்நாடு அரசு கடமையாகக் கருதுகிறது.

பள்ளிகள் மற்றும் பொதுச் சமூகம் மூலம் விளையாட்டுத் துறையில் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து அரசு அவர்களுக்கு உதவி வருகிறது. இதில் முதன்மையானதாக முதலமைச்சர் விளையாட்டுக் கோப்பைப் போட்டிகளைச் சொல்லலாம்” என்றார்.

tn will make players like dhoni

தோனி சென்னை அணிக்காக தொடர்ந்து ஆடுவார்

தொடர்ந்து தோனி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “சென்னையின் செல்லப்பிள்ளை தோனி. தமிழர்கள் ஒவ்வொருவரை போலவும் நானும் ஒரு தோனி ரசிகன்தான். தோனிக்காகவே சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டிகளைக் காண சென்றேன்.

தமிழ்நாட்டின் தத்துப்பிளையான தோனி, தொடர்ந்து சென்னை அணிக்காக ஆடுவார் என நம்புகிறேன். தோனி எளிமையான பின்னணியைக் கொண்டு கடினமான உழைப்பினால் முன்னேறியவர்.

அப்படிப்பட்ட ஒருவரை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் விளம்பரத்தூதராக நியமிப்பதில் பெருமைக் கொள்கிறோம். அவரை போல பல தோனிக்களை உருவாக்கவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

tn will make players like dhoni

உதயநிதி மறுமலர்ச்சி ஏற்படுத்துவார்

தொடர்ந்து அவர், ”தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இரண்டு ஆண்டு காலத்தில் தமிழ்நாடு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியானது மிகப்பெரிய பிரமாண்டத்தை அடைந்திருக்கிறது.

அமைச்சர் உதயநிதி பொறுப்பில் விளையாட்டுத் துறையானது மேலும் மாபெரும் எழுச்சியைப் பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையில் ஒரு கேப்டனாக மிகப்பெரிய மறுமலர்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்படுத்துவார் என்று உங்களைப்போல் நானும் நம்புகிறேன்.”  என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ. 5 லட்சம் நிதியுதவி

இதற்கிடையே ’நம்ம ஸ்கூல்’ திட்டத்திற்கு வழங்கியது போன்று ’தமிழ்நாடு சாம்பியன்ஸ்’ அறக்கட்டளைக்கும் தனிப்பட்ட முறையில் ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் மேடையிலேயே அறிவித்தார்.

கிறிஸ்டோபர் ஜெமா

“போதுமா இந்த விளக்கம்” : சபரீசனுடனான சந்திப்பு பற்றி ஓபிஎஸ்

டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்?: பன்னீர் விளக்கம்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *