உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி, கனிமொழி எம்பி உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ’அன்னையர் தினமாக’ கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து சமூகவலைதளங்களில் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் வீடியோவுடன் உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #MothersDay என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் அரசியல் தலைவர்களும் தங்களது தாயார் குறித்து உருக்கமாக பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், “உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் #MothersDay வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தாயார் தாயாளு அம்மாள் தனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தையும் ’அன்னையின் அன்பு’ என்று வெளியிட்டுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, ” ”நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது. உலகில் தாய்மையை முன்னிலைப்படுத்தும் நாடு நம் பாரத நாடு. பூமிக்கும் நம் தேசத்துக்கும் அன்னையையே முன்னிலைப்படுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “உலகத்தில் புனிதத்திலும் புனிதமானவர் நம் அன்னையே! அன்னையை மதிக்காதவன் எவ்வளவு பெரிய அரசன் ஆனாலும் புழுவிற்கு சமமானவன். அன்னை அருகில் இருந்தால் எமனுக்குக்கூட நடுக்கம் வரும். எல்லோருடைய இடத்தையும் அன்னை வகிக்க முடியும்: ஆனால் அன்னையின் இடத்தை யாராலும் வகிக்க முடியாது!
தாய் எப்போதும் தாய் தான்! உலகில் புனிதத்திலும் புனிதமானவள் அவளே! தாயை மட்டும் கண்ணீர் சிந்தவிடாதீர்கள்! நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே!
உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்! நம் அன்னையர் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழி எம்.பி., வெளியிட்ட பதிவில், “அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மனவலிமையாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்!” என தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “தாயின் அன்பையும் தாய்மையின் பெருமையையும் போற்றும் அன்னையர் தினமான இன்று, குடும்பத்தில் அனைவரையும் இணைக்கும் மையப்புள்ளியாக விளங்கும் தாயின் கடின உழைப்பு, தியாகங்கள், நம் வாழ்வில் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கினை போற்றுவோம்” என கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராயம்’: எடப்பாடி கண்டனம்!