மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அவரது சிலைக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கிங் மேக்கர், கல்விக் கண் திறந்தவர் என்று போற்றப்படும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி தினமாக இன்று (ஜூலை 15) கொண்டாடப்பட்டு வருகிறது.
விருதுநகரில் குமாரசாமி நாடார் – சிவகாமி அம்மாள் தம்பதியருக்கு 1903ஆண்டு ஆண்டு எளிய குடும்பத்தில் பிறந்தவர் காமராஜர். 6ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளி செல்வதை நிறுத்திக்கொண்டவர், இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு நாட்டின் விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
அதன்பின்னரும் தீவிர அரசியலில் ஈடுபட்ட காமராஜர், அரசியலில் படிப்படியாக வளர்ந்து, 9 ஆண்டுகள் தமிழக முதல்வராக பதவி வகித்தார். காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். குலக்கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்டாய கல்வி திட்டத்தையும், 11ஆம் வகுப்பு வரை இலவச கல்வி திட்டத்தையும் கொண்டு வந்தார்.
இவ்வாறு ஏழை மக்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட காமராஜர், அவர் மறைந்து 48 ஆண்டுகள் ஆன போதும், இன்றும் மக்கள் போற்றும் பெருந்தலைவராக கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவரது 121 வது பிறந்தநாளான இன்று பல்வேறு மாவட்டங்களிலும் அவரது சிலை மற்றும் உருவப்படத்திற்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னை நங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்தார். தேனி தென்கரையில் உள்ள காமராஜர் உருவ படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விருதுநகரில் உள்ள காமராஜரின் நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெருந்தகை காமராஜரின் பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அது, நாமும் சிறக்க நல்ல வழி காட்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
சென்னை ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் டாக்டர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் கட்சி சார்பில் இன்று மாலை 4 மணி அளவில் ஈரோடு திண்டல் அருகே உள்ள வேளாளர் மருத்துவமனை வளாகத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
சென்னை அமைந்தகரையில் காமராஜர் தொடங்கி வைத்த மாநகராட்சி பள்ளியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அங்கு படிக்கும் 300 மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, விஜய் மக்கள் மன்றம் சார்பாக அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வித்திருவிழாவாக விருதுநகரில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு நாடார் பேரவையும் பெருந்தலைவர் மக்கள் கட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அவரு யார்ணா?: 2k கிட்ஸ் பார்வையில் காமராஜர்…
பொது சிவில் சட்டம்: பாமக எதிர்ப்பு!