தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் 6 க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்
மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்க திட்டங்களுக்கு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே என்எல்சி நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் காவிரி டெல்டா பகுதிகளில் பல ஏக்கர் விவசாய நிலங்களை கபளீகரம் செய்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த டெண்டர் அறிவிப்பு விவசாயிகளிடம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகும். மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்; விவசாயம்தான் வேண்டும் என்பதே டெல்டா மக்களின் நிலைப்பாடு.
தும்பை விட்டு வாலை பிடிப்பதைவிட ஆரம்பத்திலேயே இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் போராட்டமாகவே காவிரி டெல்டா பகுதிகளில் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:
மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் புதிதாக நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுப்பதற்கான ஏலத்துக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உணவுக் களஞ்சியமாகத் திகழும் இந்தப் பகுதிகளை முற்றாக சிதைத்துச் சீரழித்து பாலைவனம் ஆக்கும் இந்தக் கேடான திட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரிப் படுகையில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசு உரிய முறையில் விரைந்து இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மக்களின் எதிர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு டெல்டா பகுதிகளில் இந்தத் திட்டங்களை செயல்படுத்த முற்பட்டால் ஒன்றிய பாஜக அரசு கடுமையான மக்கள் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்:
நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே வறட்சி, மழை நீரில் மூழ்கி விளைநிலங்கள் சேதம் போன்ற இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுபோன்ற சூழலில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதால் ஓட்டு மொத்த டெல்டா பகுதிகளும் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. விவசாயமும் கேள்விக்குறியாகிவிடும். விவசாயிகள் மீது உண்மையில் பற்று இருப்பதாக சொல்லி கொள்ளும் மத்திய அரசு, தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையென்றால் விவசாய மக்களை ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடவும் தேமுதிக தயங்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, வடசேரி, பரவன்கோட்டை, கீழ்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஆயத்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. விவசாயப் பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் தோண்டினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும், எனவே, வேளாண் மண்டலத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் ஆயத்தப் பணியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்:
தமிழ்நாட்டின் சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தொடக்கக்கட்ட பணிகள் முடிந்து ஜூன் 26 முதல் ஜூலை 10 வரை இணையவழியில் ஏலம் நடைபெறவுள்ளது.
மத்திய அரசு அடுத்தடுத்து அறிவித்த ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் காவிரி பாசன மாவட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தன. அத்தகைய வளம் மிக்க பகுதிக்கு நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக மீண்டும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுவதை பாமக ஒருபோதும் அனுமதிக்காது. தமிழ்நாட்டின் உணவுக் கோப்பையாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக அழிக்க கூடாது.
தமிழ்நாட்டையும், உழவர்களையும் காக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்பதை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். 3 நிலக்கரி சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்:
விவசாயிகளுக்கு ஆதரவாக மட்டுமல்ல, போராட்டக் களத்தில் நான் தான் முதல் ஆளாக நிற்பேன். என் நிலத்தை இழந்தால் என் வளத்தை இழப்பேன். என் வளத்தை இழந்தால் என் இனத்தை இழப்பேன். இந்த அரசுகள் தீர்ந்து போகின்ற வளங்கள் மீதே கை வைக்கின்றன. நிலக்கரியை இன்னும் எவ்வளவு காலத்திற்கு எடுப்பீர்கள்.
ஒரு அடிப்படை அறிவற்ற கூட்டத்திடம் நாட்டை கொடுத்துவிட்டு மீத்தேன், ஈத்தேன் என மாறி மாறி தோண்டி தோண்டி பூமியை நாசம் செய்கிறார்கள். எந்த மாநிலத்தில் இப்படி எல்லாம் நடக்கிறது என்று குற்றம் சாட்டியதோடு, மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகக் கூடாது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்:
புதிய நிலக்கரித் திட்டங்கள் தமிழகத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும். இதை தடுக்காவிட்டால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிகள் பாலைவனமாக மாறுவதை தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, புதிய நிலக்கரித் திட்டங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவிபச்சமுத்து:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களை, புதிய நிலக்கரித் திட்டங்களுக்காக மத்திய அரசு தேர்ந்தெடுத்திருப்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாய நிலங்களையும் அழிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக அரசும் இதை அனுமதிக்கக் கூடாது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:
இந்த திட்டம் டெல்டா மாவட்டங்களை கடுமையாகப் பாதிப்பதுடன், உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். தமிழக அரசின் ஒப்புதலின்றி இதைசெயல்படுத்துவது, மாநில உரிமையை மீறிய செயலாகும். இதுகண்டிக்கத்தக்கது. எனவே, மத்தியஅரசு உடனடியாக இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும்.
சசிகலா:
“தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் கோரியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
திமுக தலைமையிலான அரசும் ஏதோ முதற்கட்ட ஆய்வுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது விவசாயிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தமிழக டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.
மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லி காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க முடிவு எடுத்து இருப்பது முற்றிலும் தவறான நடவடிக்கை. இதன் காரணமாக சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது.
எனவே மத்திய அரசு இதுதொடர்பான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். உணவு உற்பத்திக் களமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்
காவிரி டெல்டா பகுதிகளை அதிமுக அரசு ஏற்கனவே வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், அப்பகுதியில் நிலக்கரி சுரங்கள் அமைப்பது குறித்து மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும். தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அரசு நிலக்கரி மற்றும் எரிபொருள் எடுப்பதற்கு அனுமதி வழங்குமாயின் அதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து மாநில அரசு தான் மத்திய அரசுடன் இணைந்து பேச வேண்டும்.
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்:
நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்றவை எடுப்பதற்கு அனுமதி இல்லை என தடை சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதுவார். தடை செய்யப்பட்ட பகுதியில் எந்த ஆலைகளுக்கும் அனுமதி இல்லை. விவசாயிகள் அச்சப்பட வேண்டாம், விவசாயிகளை காப்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். தடை செய்யப்பட்ட பகுதியில் சுரங்கங்கள் அமைவதற்கு வாய்ப்பில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், சேத்தியாத்தோப்புக்கு கிழக்கே உள்ள பகுதி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய இந்த மூன்று பகுதிகளும் தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதியில் உள்ளவை ஆகும். இதில் வடசேரி மற்றும் சேத்தியாத்தோப்பின் கிழக்குப் பகுதிகள் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020 இன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருகின்றன, அதே நேரத்தில் மைக்கேல்பட்டி ஒன்றியம் காவிரி டெல்டாவின் மிகவும் வளமான பகுதியை ஒட்டிய ஒரு பெரிய நெல் விளையும் பகுதியில் அமைந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டத்தின் பிரிவு 4 (1) இன் படி, “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக்கூடாது” என்று வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் “நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்” ஆகியவை அடங்கும்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் நிபந்தனைகளில் நிலக்கரி படுகை மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவை தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம், 2020 இன் தடைக்குள் அடங்கும். ஆகவே இந்த ஏல அறிவிப்பு செயல்முறைப்பட்டு, வெற்றிகரமான ஏலதாரர் அடையாளம் காணப்பட்டாலும், சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள முடியாது என்பதை இது குறிக்கிறது.
எனவே, தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட வட்டாரங்களைப் பொருத்தவரை இந்த ஏல நடைமுறை வீணான செயலாகும். அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்திருந்தால், இப்பிரச்னைகளை தெளிவுபடுத்துவதுடன், ஏலத்திற்கான அறிவிக்கை வெளியீட்டால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்.
இந்தச் சூழ்நிலையில், விவசாய நிலங்கள் இருப்பதாலும், தமிழ்நாடு மக்களின் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளதாலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்று சுரங்க வட்டாரங்கள் வடசேரி, மைக்கேல்பட்டி, சேத்தியாத்தோப்பு கிழக்கு ஆகிய மூன்றையும், ஏலத்தின் 7வது/17வது தவணையில் இருந்து விலக்கிட வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற மாநில அரசின் தொடர்புடைய பொது அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பு ஒன்றிய அரசு, மாநில அரசில் உள்ள தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு நிலக்கரி அமைச்சகத்தின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரி செய்து தேவையற்ற போராட்டங்களையும், குழப்பங்களையும் தவிர்க்க நடவடிக்கை வேண்டும்.
கிறிஸ்டோபர் ஜெமா
’அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே’: மேடையில் வருந்திய உதயநிதி
தங்கம்: வரலாறு காணாத விலை உயர்வு!