ஆருத்ரா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 29) பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
ஒரு மாதத்துக்கு போராட்டம்
அப்போது அவர். “ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட விஷயத்தின் மூலம் சர்வாதிகாரமான, மரபுகள் மீறிய நடவடிக்கையால் இந்தியா மட்டுமின்றி உலகளவில் மோடியின் மீது ஒரு வெறுப்பு பார்வை விழுந்துள்ளது.
காங்கிரஸ் நினைத்திருந்தால் இந்த நடவடிக்கையை கண்டித்து கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் ராகுல் காந்தியின் வழிகாட்டலை அடுத்து அவருக்கு ஆதரவாகவும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தியும் கடந்த 26-ம் தேதி இந்தியா முழுவதும் அறப்போராட்டம் நடத்தினோம்.
அடுத்தகட்டமாக ஒரு மாதத்துக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு விதமான போராட்டங்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை வழிகாட்டியிருக்கிறது. அதுகுறித்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றார்.
நண்பரைக் காப்பாற்ற ராகுலை தடுக்கிறார்
மேலும் அவர், ”நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பது சர்வாதிகாரி மோடியின் கருத்து. ஏன் என்றால்? பொதுவெளியில் அதானி விஷயத்தை பற்றி ராகுல் காந்தி பேசினால் அதற்கு பதில் கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசினால் அதற்கு அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும்.
எனவே ராகுல் காந்தி பேசி அந்த இக்கட்டான சூழல் வரக்கூடாது என்பதற்காக தான் அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழையக்கூடாது என்கின்ற ஒரு நிலையை மோடி எடுத்திருக்கிறார். தன்னுடைய நண்பர் அதானியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராகுலை பேசவிடாமல் மோடி தடுக்கிறார்.” என்றார்.
அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாஜக நிர்வாகி குறித்து அழகிரி பேசினார்.
ஆருத்ரா பின்னால் பாஜக
அவர் பேசுகையில், “தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மோசடியும், ஊழலும் நடந்திருக்கிறது.ஆருத்ரா நிதி நிறுவனத்தில் ரூ.2,600 கோடிக்கு மேல் ஒரு மிகப்பெரிய முறைகேடும், ஊழலும்,நடந்திருக்கிறது. தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊழலில் அரசியல் பின்னணி இருக்கிறது. இது வெறுமெனே ஒரு நிதி நிறுவனம் செய்திருக்கும் ஊழல் அல்ல. இதற்கு பின்னால் அரசியல் இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக இருக்கிறது.
எப்படி இந்திய அளவில் அதானியின் ஊழல், முறைகேடு, தவறான பொருளாதார முறைகேடுகளுக்கு பின்னால் மோடி அரசாங்கம் இருக்கிறதோ, அதேபோல ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக்கு பின்னால் தமிழக பாஜக இருக்கிறது.
அண்ணாமலையுடன் அந்த நிதி நிறுவன அதிபர் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார் என்பதை வைத்து நான் சொல்லவில்லை. பொதுவாக அரசியல் தலைவரிடம் பலபேர் வந்து படம் எடுத்துக்கொள்வார்கள். அப்போது நாம் யார், என்ன என்பது குறித்து விசாரித்து பக்கத்தில் அமர வைக்க முடியாது.
ஆனால் இது அப்படி அல்ல. இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த மூன்று பேரை அழைத்து நாங்கள் விசாரித்தோம். அவர்கள் மத்திய அரசின் ஆதரவு இதற்கு இருக்கிறது. பாஜகவின் ஆதரவு இருக்கிறது. இந்த நிதி நிறுவனத்தின் உரிமையாளர் பாஜகவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்திருக்கிறார். தமிழக தலைவர் அண்ணாமலையுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது.
எனவே இந்த காரணங்களினால் இந்த நிதி நிறுவனம் சரியாக இருக்கும் என்று நாங்கள் முதலீடு செய்தோம். ஆனால் அனைவரும் திட்டமிட்டு அந்த பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள். இப்போது அவர்களிடம் சென்று கேட்கவே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. ஏனெனில் இதற்கு பின்னால் தமிழக பாஜக, மத்திய ஆளும் அரசாங்கம் இருக்கிறது. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அண்ணாமலை தான் இந்த பணத்தை கேட்டு எங்களுக்கு வாங்கி தர வேண்டும். ஏனெனில் அந்த கட்சியில் அவர் முக்கியமானவராகவும், அண்ணாமலைக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார். அதை நம்பி தான் நாங்கள் முதலீடு செய்தோம் என்று தான் சொல்கிறார்கள்.
எனவே அந்த நிறுவனத்தில் இருக்கும் சாதாரணமானவர்களை அழைத்து விசாரித்தால், பல நிதி நிறுவன மோசடிகள் போலவே, இதுவும் கொஞ்ச காலத்தில் மறைந்துவிடும்.
குற்றவாளிகளின் புகலிடம் பாஜக
தமிழ்நாடு அரசு, தமிழக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை நேரடியாக அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். அண்ணாமலைக்கு இந்த நிதி நிறுவனத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று அவர்கள் விசாரித்து அறிய வேண்டும்.
நான் வழக்கு போட வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை. குறைந்தபட்சம் விசாரியுங்கள் என்று தான் சொல்கிறேன். விசாரித்தால் தான் உண்மை கிடைக்கும். இல்லை என்றால் உண்மை கிடைக்காது.
தமிழகத்தில் சமீப காலமாக எந்த குற்றம் செய்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பாஜகவோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். குற்றம் செய்பவர்களுக்கு எல்லாம் புகலிடமாக பாஜக தான் இருக்கிறது. ஒரு காலத்தில் பாஜக கொள்கை ரீதியாக தான் வேறுபட்டு இருந்ததே ஒழிய குற்றவாளிகளின் புகலிடமாக அது இல்லை. ஆனால் இன்று குற்றவாளிகளின் புகலிடமாக இருக்கிறது.
இன்றைய பாஜகவில் ஏமாற்றுக்காரர்கள், சமூக விரோதிகள், கிரிமினல் ஆகியோரெல்லாம் இவர்களெல்லாம் பாதுகாப்பு கருதி இருக்கிறார்கள். அது தேசத்திற்கு விரோதம். தப்பு செய்பவர்கள் எல்லாம் பாதுகாப்பு கருதி ஒரு அரசியல் கட்சியில் இருந்தால், அதனால் அந்த நாட்டுக்கு எவ்வளவு தீங்கு ஏற்படும்.
எனவே தமிழக முதல்வரை சந்தித்து எங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும், அண்ணாமலை மீது விசாரணை செய்தல் வேண்டும் என்றும் கோரிக்கையை வைக்க இருக்கிறார்கள். இதுபோன்ற போக்கு தமிழகத்திற்கு நல்லதல்ல என்பதால் இதை சொல்கிறேன். .” தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதன்முறையாக பந்துவீச்சில் சதம்: சி.எஸ்.கே.வை பயமுறுத்தும் ரஷீத் கான்!
கர்நாடக பொதுத் தேர்தலோடு நடக்கும் இடைத் தேர்தல்கள் என்னென்ன?