Leaders reaction on Madurai AIIMS

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் தொடங்கியது : தலைவர்கள் ரியாக்சன்!

அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளை மத்திய அரசு இன்று (மார்ச் 5) தொடங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லியில் இருப்பது போன்று நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் தோப்பூரில் 222 ஏக்கரில் அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் அங்கு எந்த பணியும் நடைபெறாத நிலையில்  மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.

சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

வாஸ்து தினத்தில் தொடங்கியுள்ளது!

இந்த நிலையில், வாஸ்து தினமான இன்று எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளை வாஸ்து பூஜையுடன் எல்&டி நிறுவனம் தொடங்கியுள்ளது.

கீழ் தளம், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் கூடிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ஆம் ஆண்டுக்குள் கட்டிமுடித்து திறப்பு விழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டு இடைவெளி என்பது புதிய சாதனை!

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில், “தேர்தல் நேரத்தில் அவசரம் அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை தொடங்கியுள்ளனர்” என்று குற்றஞ்சாட்டினார்.

மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு இடைவெளி என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மோடி தானே அறிவித்தார்!

பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “2014 ஆண்டுக்கு முன் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் கொண்டுவரவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி தானே அறிவித்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்” என்று தெரிவித்தார்.

திமுக எம்.பி. கனிமொழி, “தேர்தல் நேரத்தில் நிறைய பணிகளை தொடங்குவார்கள். தேர்தலுக்கு பின்னரும் கட்டுமான பணிகளை தொடர்ந்து கட்டி முடித்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ரஜினி பட ஷூட்டிங்கில் ராணா

எல்லாம் தெரிஞ்சும் எப்படி அவர கேப்டன் ஆக்கினீங்க?… முன்னாள் வீரர் ஆதங்கம்!

”அய்யா வைகுண்டர் வரலாறு தெரியாமல் வாய் திறக்க கூடாது!” : ஆளுநருக்கு பால பிரஜாபதி கண்டனம்!

+1
0
+1
3
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *