தனியார் வசமாகும் அரசு போக்குவரத்துக்கழகம்? : சீமானுக்கு அமைச்சர் பதில்!

Published On:

| By christopher

புதிய பணியாளர்களை முறைப்படி தேர்வு செய்த பிறகு ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் முறை கைவிடப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்துக்கழகத்தைத் தனியார்மயமாக்கும் எதேச்சதிகாரப்போக்கினை திமுக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஜூலை 29) அறிக்கை வெளியிட்டிருந்தார்.  

அரசுப்போக்குவரத்துத்துறையை முழுதாக சீரழித்துள்ளது

அதில் “ தமிழ்நாடு முழுவதும் 10,000 வழித்தடங்களில், 1,40,000 தொழிலாளர்களுடன், நாள்தோறும் 2 கோடி ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செயற்பட்டு வந்த அரசுப்போக்குவரத்துத்துறையை முழுதாக சீரழித்துள்ளது திமுக அரசு.

கடந்த 2017ஆம் ஆண்டு வரை 23,000 பேருந்துகள் இயங்கி வந்த அரசுப்போக்குவரத்துத்துறையில், தற்போது 4,000 பேருந்துகள் வரை குறைக்கப்பட்டு, வெறும் 19,000 பேருந்துகள் மட்டுமே இயங்கும் அவலநிலை காணப்படுகிறது.

அதுமட்டுமின்றி இலவசப் பேருந்துகளால் ஏற்படும் நட்டத்தை ஈடுகட்ட திமுக அரசு ஆயிரக்கணக்கான தடங்களில் பேருந்துகள் சேவையை நிறுத்தி பெருங்கொடுமையையும் புரிந்துள்ளது.

அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாகவுள்ள 25,000 பணியிடங்களுக்கு, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படாதது ஏன்? பணியின்போது உயிரிழந்த போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகள் 8,000 பேருக்கு, கருணை அடிப்படையில் வழங்க வேண்டிய வாரிசு வேலையை வழங்க மறுப்பது ஏன்?

90,000 போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காதது ஏன்?

போக்குவரத்து ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி 13,000 கோடி ரூபாயையும் சிறிதும் மனச்சான்றின்றி திமுக அரசு எடுத்துக்கொண்டது ஏன்?

இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடு வழங்கப்படாதது ஏன்?

பேருந்துகள் தனியார்மயம், ஒப்பந்த அடிப்படையில் தனியார் ஊழியர்களை நியமிப்பது என போக்குவரத்துக் கழகங்களைச் சீர்குலைக்க முயல்வது ஏன்? என்ற கேள்விகளுக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?” என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி சீமான் கேள்வி எழுப்பியிருந்தார். 

தனியார் மயமாக்கல் என்பது கிடையாது!

இந்த நிலையில் இன்று  கடலூரில் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையில் தனியார் மயமாக்கல் என்பது கிடையாது. தமிழ்நாடு அரசை குறை கூறவும் அரசியல் நோக்கத்திற்காகவும் சர்ச்சை எழுகிறது.

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் சில இடங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்கிறோம். ஏன் என்றால் அதிமுக ஆட்சியில் சரியாக ஊதியம் வழங்காதது, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி நிறைவு பணப்பலன் கொடுக்காதது, ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60ஆக உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் கடந்த மே மாதம் அதிகமானோர் ஓய்வு பெறுகிற சூழல் ஏற்பட்டது.

அதனால் ஏற்பட்ட காலி இடங்களை நிரப்ப காலதாமதம் ஆன காரணத்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டார்கள். அதன் காரணமாக கோடை காலங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளை சிரமமின்றி இயக்க முடிந்தது. இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆண்டை விட  அதிக வருவாயும் ஈட்ட முடிந்தது.

ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் என்பது தற்காலிகமான நடவடிக்கை. புதிய  பணியாளர்களை முறைப்படி தேர்வு செய்த பிறகு ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் முறை கைவிடப்படும்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

31 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் : ஆசிரியர்கள் கைது!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… எகிறிய வெள்ளி விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel