’மின் கட்டண உயர்வு எதிர்வினைகளை உருவாக்கும்’: ஈ.ஆர்.ஈஸ்வரன்

அரசியல்

சிறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை அமல்படுத்த உத்தேசித்து இருப்பது எதிர்வினைகளை உருவாக்கும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறு தொழில்கள் அதற்குப் பிறகு வட இந்திய தொழிலாளர்கள் ஊர் திரும்பிய காரணத்தினால் மேலும் பாதிக்கப்பட்டது.

உலக நாடுகளில் காணப்படும் மந்த நிலை மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் நலிவடைந்த தொழிற்சாலைகளை மீண்டெழ முடியாத ஒரு நிலைக்கு தள்ளியது. இதற்கு முன்னால் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு கூடுதல் செலவினமாக சேர்ந்து சிரமத்தை கொடுத்தது.

ஓரளவிற்கு அந்த சிரமத்தை எல்லாம் பொறுத்துக் கொண்டு பல்வேறு விதங்களில் செலவினங்களை குறைத்து சிறு தொழில்கள் மீண்டெழ முயற்சிக்கிற சூழலில் மறுபடியும் மின்கட்டண உயர்வு என்பது பாதிப்புகளை பெருமளவில் ஏற்படுத்தும்.

வீடுகளுடைய மின் கட்டண உயர்வை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்ற முதலமைச்சரின் உத்தரவு வீட்டு மின் உபயோகிப்பாளருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தொழிற்சாலைகள் தாங்கிக் கொள்வார்கள் என்று நினைத்து சிறு தொழில்களுக்கான மின் கட்டண உயர்வை அமல்படுத்த உத்தேசித்து இருப்பது எதிர்வினைகளை உருவாக்கும்.

இன்றைய சூழலில் சிறு தொழிற்சாலைகள் இலாபம் ஈட்டுவதில்லை என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளுக்கு மின் கட்டண உயர்வு மேலும் நஷ்டத்தை அதிகரிக்கும் என்பதை புரிந்து கொண்டு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்து முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார இழப்பையும், வேலை இழப்புகளையும் தவிர்க்கலாம்.” என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

சென்னை கடற்கரை – சேப்பாக்கம் இடையே ரயில் சேவை தொடரும்!

உக்ரைன் அணை உடைப்பு: வெள்ளத்தில் மூழ்கிய 29 கிராமங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *