நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோது கிராமசபைக் கூட்டத்தை, அதிமுகவை எதிர்க்கும் தனது பிரச்சாரத்தின் ஒருபகுதியாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்தார். மேலும் அதிமுக ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளும் கிராம சபை கூட்டங்களை நடத்தவில்லை என்று அவர் தீவிரமாக குற்றஞ்சாட்டினார்.
ஒரே ஆண்டில் 6 கிராம சபை கூட்டம்!
பின்னர் திமுக ஆட்சிக்கு வந்து முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ”இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் அறிவித்தார்.
அதன்படி, ஜனவரி -26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களுடன், கூடுதலாக மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் மற்றும் நவம்பர் 1 உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு!
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு ஏற்கெனவே அறிவித்தபடி அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஸ் அகமது உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குறைவெண் வரம்பின் படி உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், அனைத்து கிராம மக்களும் ஆர்வத்துடன் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை கிராம மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது குறித்த அறிக்கையை வரும் 22 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் ஆணையர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ரூ.39 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!