தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு தடைவிதித்தது போல் மெத்தனால் பயன்பாட்டிற்கும் கட்டுபாடுகளை விதிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகே உள்ள மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் கடந்த 2 நாட்களாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து விசாரித்ததுடன் அவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அங்கு செல்ல உள்ளார்.
முன்னதாக தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ” என்றார்.
தொடர்ந்து அவர் “விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பல்வேறு மருத்துவமனைகளில் 66 பேர்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 55 பேரும் நலமுடன் வீடு திரும்புவதை கண்காணிக்கும் வகையில் ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட உள்ளார்.
மேலும் முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் நானும் அங்கு நேரில் சென்று இன்று ஆய்வு செய்ய உள்ளேன்.
19 உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராயத்தில் அதிகம் கலந்திருந்த மெத்தனால் என்ற வேதிப்பொருள், பல்வேறு பயன்பாடுகளுக்கும் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எனவே அவற்றுக்கு முழுமையாக தடைவிதிப்பது கடினம். எனினும் அதன் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தான் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதே போல் மெத்தனால் பயன்பாட்டிற்கும் கட்டுபாடுகளை விதிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா