அரசு போக்குவரத்துக் கழகங்கள் தனியார் மயமாகிக் கொண்டிருக்கின்றன என்றும், இதனால் ஊழியர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வருகின்றனர். அவ்வப்போது இது திடீர் போராட்டமாகவும் வெடித்துள்ளது. TN Govt is going to pay for private buses
இந்த நிலையில் அடுத்து தமிழ்நாட்டு சாலைகளில் களமிறங்கப் போகும் இ பஸ்கள் அதாவது மின்சாரப் பேருந்துகளால் தனியார் மயம் அபாயகரமான அடுத்த கட்டத்துக்கு செல்ல இருப்பதாக எச்சரிக்கிறார் சிஐடியு அரசு போக்குவரத்துக் கழக சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார். TN Govt is going to pay for private buses
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் 1972 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால், மூவாயிரம் பேருந்துகளுடன் துவக்கப்பட்டது. பேருந்துப் போக்குவரத்து பெரும் தனியார் முதலாளிகளிடம் இருந்த அந்த காலகட்டத்தில் முதல்வர் கலைஞர் மிகத் துணிச்சலோடு இந்த முடிவை மேற்கொண்டார். அப்படிப்பட்ட போக்குவரத்துக் கழகம் இப்போது ஏன் தனியார் மய ரூட்டில் செல்கிறது?
ஆறுமுக நயினாரே நம்மிடம் விளக்கினார்.
“அப்போதிருந்த திட்ட வளர்ச்சிக் குழு (planning developement committee), ரூட்களை ஆய்வு செய்தும், மக்கள் பயணிக்கும் கணக்குகளை எடுத்தும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தியது. ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரிக்கும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் 10% பேருந்துகளை அதிகரிக்க வேண்டும் என்று இக்குழு பரிந்துரைத்தது.
அந்த வகையில் 1972ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டு, 2014-2015இல் 22,474 பேருந்துகள், 2015-2016 இல் 23,078, 2016-2017 இல் 22,533 பேருந்துகள் வரை அதிகரித்தது.
இந்த எண்ணிக்கை 2017-2018 இல் 21,244, 2018-2019இல் 21,744 , 2019-2020இல் 20,944, 2022-2023இல் 20,245 ஆக குறைந்தது.
2023 முதல் இப்போது வரை 20,213 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் மாற்றுப்பேருந்துகள் 1500, மீதமுள்ள பேருந்துகள் 18,713 ஆகும்.
போக்குவரத்து துறையில் 2018இல் 1.40 லட்சம் ஊழியர்கள் இருந்தனர். தற்போது 1.20 லட்சம் ஊழியர்கள்தான் பணியாற்றுகின்றனர். 2018இல் நாள் ஒன்றுக்கு 2.10 கோடி பயணிகள் பயணித்தனர். இந்த எண்ணிக்கை 2023ல் 1.70கோடியாக குறைந்துள்ளது.
அதே சமயம் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவால் சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் மக்கள் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது” என்று விளக்கிய
ஆறுமுக நயினார், நடப்பு விவகாரத்துக்கு வந்தார்.
`திட்ட வளர்ச்சிக் குழு அறிக்கையின் அறிவுறுத்தல்படி தற்போது 27,000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும், ஆனால் தற்போது ஸ்பேர் பஸ் இல்லாமல் 18,713 பேருந்துகள்தான் இயக்கத்தில் உள்ளன,
அதிலும் ஆள் பற்றாக்குறையால் நாள் ஒன்றுக்கு 500 முதல் 1000 பேருந்துகள் வரையில் டிப்போவிலேயே நிற்கிறது. இதனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 17 ஆயிரம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
2018ல் கடந்த அதிமுக ஆட்சியில் அரசாணை எண் 371 முதல் 378 வரை 8 அரசு அணையைக் கொண்டு வந்து, பேருந்துகள் குறைப்பு, ஆள் குறைப்புகள் செய்யப்பட்டது.
அதை ரத்து செய்யவேண்டும், பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம்.
திமுக ஆட்சி வந்ததும் நிறைவேற்றுவோம் என்றார் ஸ்டாலின், ஆட்சி வந்ததும் சொன்ன வாக்குறுதிகளை மறந்து விட்டு அதிமுக பாதையில் திமுகவும் பயணிக்கிறது” என்றார்.
மேலும் அவர், `ஒரு பேருந்துக்கு 100 முதல் 150 பயணிகள் வரையில் ஏற்றப்படும் நிலையில், ஒரு கிமீ தூரத்துக்கு 30 ரூபாய்தான் வருவாய் கிடைக்கிறது. செலவாவதோ 60 ரூபாய். மீதம் ஈடு கொடுக்க அந்த 30 ரூபாயை அரசுதான் கொடுக்கிறது.
இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் மத்திய பாஜக அரசின் கொள்கைப்படி, தேசிய பொதுச் சொத்துக்களை பணமயமாக்கல் திட்டத்தின்படி தமிழக அரசும் செயலில் இறங்கிவிட்டது.
அதாவது இ பஸ்களை ஒரு பஸ் இரண்டு கோடி என்று தனியார் முதலாளிகள் வாங்கி விடுவார்கள், அதில் தனியார் பேருந்து முதலாளி ஓட்டுநரை நியமிப்பார் என்றும், நடத்துநர் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும் இப்போது கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதற்கான செலவுகளை அரசு கொடுக்குமாம், அதாவது இந்த இ பேருந்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசு சுமார் நூறு ரூபாய் கொடுக்கும். இதனால் அரசு தற்போது கொடுக்க வேண்டிய தொகையை விட இரு மடங்கு கூடுதலாக கொடுக்க வேண்டி இருக்கும்.
தற்போதைய அரசு பேருந்தில் அதிகபட்சம் 150 பேர் வரை பயணிக்க முடியும். ஆனால் இந்த இ பேருந்தில் 50 பேர்தான் பயணிக்க முடியும். பராமரிப்பு செலவும் அதிகம்.
அரசின் இந்தத் திட்மிட்டல் தனியார் முதலாளிகளை கொழுக்க வைப்பதும், அரசு போக்குவரத்துக் கழகத்தை அடியோடு அழிக்கவைப்பதும் ஆகும். அதுமட்டுமல்ல. அரசையும் கடன் காரனாக்கிவிடும், அதனால் அரசு போக்குவரத்துக் கழகத்தை காப்பாற்றுங்கள். முதல்வர் ஸ்டாலின் அவர்களே ரூட்டை மாற்றுங்கள்` என்று வலியுறுத்தினார் ஆறுமுக நயினார்.
இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முக்கிய உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “இந்தியா முழுதும் பத்தாயிரம் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசு-தனியார் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். மத்திய அரசின் கொள்கை முடிவுகளின்படி மாநிலங்களில் மின்சாரப் பேருந்துகள் பற்றிய முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது பொருளார சீர்த்திருத்தங்களின் அடிப்படையில் எடுக்கப்படுகிற முடிவு. இதில் குறைபாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் இதுபற்றி நாங்கள் வெளிப்படையாக பேச முடியாது” என்கிறார்கள்.
லெப்ட்டில் இண்டிகேட்டர் போட்டு, ரைட்டில் கையைப் போட்டு ஸ்ரைட்டாக போகும் விவேக் காமெடியை சினிமாக்களில் பார்த்திருப்போம். ஆனால்… ’கலைஞர் ரூட்டில் போவதாக உறுதியளித்துவிட்டு, மோடி ரூட்டில் பயணிக்கிறதோ அரசுப் போக்குவரத்துக் கழகம்?’ என்ற சீரியசான கேள்வியை ஆறுமுக நயினாரின் எச்சரிக்கைகள் எழுப்பியிருக்கின்றன.
போக்குவரத்து அமைச்சகம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்!
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!
பிகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு முழு விவரங்கள் வெளியீடு!
‘என்னை அறிந்தால்’ இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்!