2022ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது பெறும் ஆளுமையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு இன்று (ஆகஸ்டு 6) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, `தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருது அளிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ம் ஆண்டு அறிவித்து இருந்தார். ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் கைகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்த விருதுடன், பாராட்டுச் சான்றிதழும், பரிசுத்தொகையாக பத்து லட்ச ரூபாய் காசோலையும் கையளிக்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இந்தாண்டு தகைசால் தமிழர் விருது பெறும் ஆளுமையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் இந்த விருதினை ஆர்.நல்லகண்ணுவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு திருப்பூரில் இன்று துவங்கியது. வரும் 9ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டினை அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கொடியேற்றி துவக்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பங்கேற்று காணொலி வாயிலாக உரையாற்ற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தகைசால் விருது ஆர்.நல்லகண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் `தகைசால் தமிழர்’ விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று- வெற்றியை நோக்கி தன்கர்