ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (ஜனவரி 26) தேநீர் விருந்து அளிக்க உள்ள நிலையில், அதில் தமிழக அரசு பங்கேற்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சமீபத்தில் நடைபெற்ற இந்தாண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை என்று கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார். பின்னர் தமிழக அரசு மற்றும் முதல்வர் ஸ்டாலின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதனை காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே புறக்கணித்துள்ளன. இந்த நிலையில் தமிழக அரசு ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரிட்டாப்பட்டிக்கு செல்கிறார் ஸ்டாலின்
மதுரை மேலூர் தாலுகா அரிட்டாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு ஏலம் வழங்கியது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
தமிழக சட்டப்பேரவையில், ‘நான் முதல்வராக இருக்கிற வரையில் டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை கொண்டுவர முடியாது’ என ஸ்டாலின் கூறியதுடன், அதற்கு எதிராக தீர்மானத்தையும் கொண்டு வந்தார். இதனையடுத்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக கடந்த 23ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விழா அரிட்டாபட்டியில் நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்குமாறு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து அரிட்டாபட்டி மக்கள் அழைப்பு விடுத்தனர்.
அதனை ஏற்றுக்கொண்ட ஸ்டாலின், ’உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்!’ எனத் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை குடியரசு தின விழா கொடியேற்றம் நிறைவடைந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு புறப்படுகிறார். இதனால் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தில் அவர் பங்கேற்க மாட்டார்.
கடந்த ஆண்டும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்த நிலையில், அரசு சார்பில் முதல்வரும், அமைச்சர்களும் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அரசு சார்பிலும் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.