ஆர்.எஸ்.எஸ். பேரணி அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததை அடுத்து, அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோர வேண்டும் என சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று (செப்டம்பர் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, “அக்டோபர் 2ம் தேதி ஆர்எஸ்எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும்” என காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 23) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று, அவரது படுகொலைக்காகத் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். எனும் மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.
மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத் தவறான முன்னுதாரணமாகும். மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் லாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பதென்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் பேராபத்தாகும்.
ஆகவே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்” என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
திமுக எம்.எல்.ஏ. மீது ஆக்ஷன்: ஸ்டாலினை வலியுறுத்தும் தலைவர்கள்!
Comments are closed.