வெள்ள நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 3) வழக்கு தொடர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களிலும் எதிர்பாராத வகையில் அதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் இருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் உள்ள ஆற்றின் கரையோர கிராம விளைநிலங்களும், வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டன.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரி தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை.
தற்போது மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று வேலூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும்போது, வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசு மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வெள்ள நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தைவானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன… மூன்று நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
IPL 2024: 156.7 கி.மீ வேகம்… ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த மயங்க் யாதவ்