உதயநிதிக்கு அண்ணன் மாதிரி இருக்கிறேன்: முதல்வர் சொன்ன ஃபிட்னஸ் ரகசியம்!

அரசியல்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்ற ’ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களுடன் சேர்ந்து முதல்வர் ஸ்டாலின் விளையாடி மகிழ்ந்தார்.

சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கவும், வாகனம் அல்லாத போக்குவரத்தை மேம்படுத்தவும் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ என்ற நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னை அண்ணா நகரில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் திடீரென வருகை தந்ததை அடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். பொதுமக்களுடன் சேர்ந்து கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் விளையாடியும், அவர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.

உடற்பயிற்சியும், விளையாட்டும் முக்கியம்!

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ”எனக்கு 70 வயதாகிறது. ஆனால் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், உதயநிதியுடன், என்னை சேர்ந்து கண்டால், நீங்கள் இருவரும் சகோதரர்களா என்று கேட்பார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட போதிலும், நான் விரைவாக குணமடைந்து விட்டேன்.

அதற்கு காரணம் நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது தான். உடற்பயிற்சியும், விளையாட்டும் ரொம்ப முக்கியம்.

கடந்த வாரமே நான் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு வர ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது தான் வர முடிந்துள்ளது.

எதிர்பார்த்ததற்கும் மேலாக இங்கு குழந்தைகளுடன் பெற்றோர்களையும் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நீங்கள் பங்கேற்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் நடப்பது என்ன?

பொதுமக்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி முக்கிய சாலைகளில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், கூடைப்பந்து, கிரிக்கெட், ஸ்கேட்டிங், கராத்தே, டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை மற்றும் நாம் விரும்பும் அனைத்தையும் விளையாடலாம்.

இதற்காக காலை 6 மணி முதல் 9மணி வரை சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படும்.

52 வார ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை முழுவதும் 8 இடங்களில் இந்த நிகழ்ச்சி நடைபெற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

கலைஞர் கேட்டு திருமாவளவன் நிறைவேற்றாத கோரிக்கை: ஸ்டாலின் பகிர்ந்த சீக்ரெட்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0