சாதாரண சட்டத்திற்கு கூட ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் இன்று (மார்ச் 10 ) நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவள விழா மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டர்.
பின்னர் பேசிய அவர், “இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1948 ஆம் ஆண்டு மார்ச் 10 நாள் காயிதேமில்லத்தால் தொடங்கப்பட்டது. அதன் 75 வது பவள விழாவை நாம் இன்று எழுச்சியோடு கொண்டாடி வருகிறோம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சிறுபான்மையினராக இருக்க கூடிய முஸ்லீம்களுக்கு மட்டும் அல்லாமல் பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாகவும் செயல்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டியது.
சமூக நீதிக் கோட்பாடுதான் நான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவுக்கு வர காரணமாக உள்ளது.
திமுகவிற்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்குமான தொடர்பு இன்று நேற்று ஏற்ப்பட்டது அல்ல. தலைவர் கலைஞர் அவர்களை உருவாக்கியதில் தந்தை பெரியார் நடத்திய ’குடியரசு’ இதழைப்போலவே ’தாருல் இஸ்லாம்’ என்ற இதழுக்கும் பங்கு உண்டு. மிகச்சிறிய வயதிலேயே ’தாருல் இஸ்லாம்’ இதழை படித்து தான் விழிப்புணர்வு பெற்றதாக தலைவர் கலைஞர் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணாவையும், கலைஞரையும் இணைப்பதற்கு பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமூகம் தான். பள்ளி காலத்தில் கலைஞருக்கு உற்ற தோழனாக இருந்து உதவி செய்தவர் ஹசன் அப்துல் காதர் என்ற இஸ்லாமியர்.
இஸ்லாமியர்களுக்கும் , கலைஞருக்குமான நட்பானது யாராலும் , யவனாலும் , எந்த கொம்பனாலும் பிரிக்க முடியாதது.
மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தவர் கலைஞர். அதனை ரத்து செய்தது அதிமுக ஆட்சி . ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர் மிலாது நபிக்கு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் “ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே பண்பாடு என்று இந்தியாவை மாற்ற நினைப்பவர்கள் சமூக நீதிக்கு எதிரானவர்கள் சகோதரத்துவத்துக்கு விரோதமானவர்கள் சமதர்மத்தை ஏற்காமல் இருக்க கூடியவர்கள்.
சூதாட்டம் , நுழைவுத்தேர்வால் ஏற்படும் உயிர்ப் பலிகளை தடுக்க சட்டம் நிறைவேற்றினால் அதை தடுக்கிறார் ஆளுநர்.

நான்கு மாதம் கழித்து மாநில அரசுக்கு இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்ற உரிமை இல்லை என்று சொல்லுகிறார் ஆளுநர்.
இந்த சாதாரண சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு உரிமை இல்லாத மாநிலத்திற்கு தான் அவர் ஆளுநராக இருக்கிறாரா?
நீட் விலக்கு கேட்டு அவசர சட்டம் போட்டு அனுப்பினால் அதை நீண்ட நாள் கிடப்பில் போட்டுத்தான் குடியரசு தலைவருக்கு அனுப்புகிறார். பல்கலைகழங்களில் வேந்தர் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது. இது தான் ஆளுநர் செயல்படக்கூடிய லட்சணமா?
உழவர்களுக்கு எதிரான மூன்று வேளாண்மை சட்டம் உடனடியாக நிறைவேறும். சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை சட்டம் வேகமாக நிறைவேறும் . நீட் தேர்வை கொண்டு வந்து ஏழைகளின் மருத்துவக்கனவை தடுப்பார்கள். இந்தியை திணிப்பார்கள். மாற்று மதத்தவர் மீது வெறுப்பு பிரசாரத்தை செய்வார்கள் ஆனால் சூதாட்டத்தாலும் , நுழைவுத்தேர்வாலும் உயிர்கள் பலியாவதை தடுக்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றமல் தடுக்கிறார்கள்.
இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க கூடிய தேர்தலாக 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்க கூடிய நாடாளுமன்ற தேர்தல் அமையப்போகிறது” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மனிதம் போற்றும் ‘அயோத்தி’: சீமான் பாராட்டு!
இணையத்தில் லீக்கான ‘’ஜவான்’’ படக்காட்சி: ரசிகர்கள் கொண்டாட்டம்!