டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்- ஸ்டாலின் சொல்வது என்ன?, செய்வது என்ன? 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்திகளும் ஆளுநர் உடனான புதிய அமைச்சரவையின் குரூப் போட்டோவும் வந்து விழுந்தன.
இதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது.

“மே 11ஆம் தேதி காலை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தொழில்துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்று கொண்டார்.

பதவி ஏற்ற சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர், அதன் பின் முதல் நிகழ்வாக ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிகழ்வில்  கலந்து கொண்டார்.

அதே நேரம் இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் பதவியில் இருந்து நிதித்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ள தங்கம் தென்னரசுவும் கலந்து கொண்டார். ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த முதலீடு தொடர்பாக ஆரம்ப கட்டத்தில் இருந்து உழைத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு  முக்கியமான காரணமாக இருந்த  அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிகழ்ச்சியில் வாட்டமான முகத்தோடு கலந்து கொள்ள… புதிய தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது.

அமைச்சரவை மாற்றம் பற்றி திமுக அமைச்சர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளின் எண்ண ஓட்டம் என்ன என்பதை இந்த விழாவே குறிப்பால் உணர்த்திவிட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவும் துறைச் செயலாளரும்,  அதிகாரிகளும்  இந்திய அளவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்குச் சென்று  தொழில் நிறுவனங்களிடம் பேசி தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை திரட்டி, தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளனர்.

அவரையும் துறைச் செயலாளரையும் அதிகாரிகளையும் மனதார  பாராட்டுகிறேன். நிர்வாக காரணங்களால் அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டாலும் தொழில் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்பு தொடரும்’ என்று பேசினார்.
அமைச்சரவை மாற்றத்தையடுத்து சில நிமிடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு சக அமைச்சர்களிடத்திலும், திமுக சீனியர் நிர்வாகிகளிடத்திலும் பல்வேறு கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

’நிர்வாக காரணங்களுக்காக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஹூண்டாய் விழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நிதித் துறையில் பிடிஆரின் நிர்வாகம் சரியில்லாததால் அவர் மாற்றப்பட்டிருக்கிறார், தொழில் துறையில் தங்கம் தென்னரசு நிர்வாகம் சரியில்லை என்பதால் அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.

பால் வளத்துறையில் நாசரின் நிர்வாகம் சரியில்லாததால் அவர் நீக்கப்பட்டிருக்கிறார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். ஆனால் அதே நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு பல்வேறு முதலீடுகளை கொண்டுவந்து தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி செய்தார் என்றும் பாராட்டுகிறார்.

அப்படியென்றால் தங்கம் தென்னரசு நிர்வாகத்தை நன்றாகத்தானே கவனித்தார்? பிறகு ஏன் நிர்வாக காரணங்களுக்காக அவர் மாற்றப்படுகிறார்? கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில்தான் பிடிஆரின் நிர்வாகத் திறமை பற்றி வானளாவப் புகழ்ந்தார் ஸ்டாலின்.  அப்படியென்றால் பிடிஆரும் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்படவில்லை.

அதாவது பிடிஆரின் ஆடியோதான் இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு முக்கியக் காரணம். அந்த ஆடியோவில் இருப்பது பிடிஆரின் குரல்தான் என்பதை உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்திக் கொண்ட முதலமைச்சர், பிடிஆரை அமைச்சரவையில் இருந்தே அகற்றத் திட்டமிட்டார். ஆனால் அது பாஜகவின் வெற்றியாகிவிடும் என்ற ஆலோசனைகளால் தன்  முடிவை மாற்றிக் கொண்டார். ஆனால் பிடிஆரை இலாகா மாற்றுவது என்பதில் உறுதியாக இருந்தார்.

பிடிஆரை மட்டும் துறை மாற்றினால் அது ஆடியோவால்தான் என்று பேசப்படும் என்பதால் பல்வேறு புகார்களுக்கு உள்ளான ஆவடி நாசர் மீது நடவடிக்கை எடுத்தார். டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவைக்குள் கொண்டுவர முடிவெடுத்தார். ஆவடி நாசரை நீக்குவது,  ராஜாவை கேபினட்டுக்குள் கொண்டுவருவது என்பதோடு இது நிற்கவில்லை.

பிடிஆரின்  நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறையை தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைத்திருக்கிறார். தங்கம் தென்னரசு தொழில் துறையை ஸ்டாலின் கூற்றுப்படி சிறப்பாக கவனித்து வந்த நிலையில் அவர் அத்துறையில் இருந்து மாற்றப்பட்டு நிதித் துறை அமைச்சராக்கப்பட்டிருக்கிறார்.

தங்கம் தென்னரசு விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். அந்த வகையில் தொழில் துறை என்ற பலமான துறையை தங்கம் வைத்திருந்தார். இப்போது அவருக்கு நிதித்துறை  கொடுக்கப்பட்டிருக்கிறது.  நிதித்துறையை வைத்துக் கொண்டு அவர் கட்சியினரை எப்படி திருப்திப் படுத்த முடியும், கட்சியை எப்படி வளர்க்க முடியும் என்கிறார்கள் விருதுநகர் திமுகவினரே.

இதுமட்டுமல்ல, தங்கம் தென்னரசுவை திருப்திப்படுத்துவதற்காக அவருக்கு அமைச்சர்  துரைமுருகனிடம் இருக்கும் கனிம வளத்துறையை எடுத்துக் கொடுக்க முடிவு செய்திருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஆனால் இந்தத் தகவல் அறிந்த திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் முதலைமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, ’இந்த நேரத்துல என் துறையை நீங்க மாற்றினீங்கன்னா நான் சரியாக செயல்படலைனுதானே அர்த்தமாகும்? ‘ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதனால் அந்த முடிவை சற்று ஒத்திப் போட்ட ஸ்டாலின், ‘கொஞ்சம் காத்திருங்கள்’ என்று தங்கம் தென்னரசுவிடம் சொல்லியிருக்கிறார்.

தனது மகன், மருமகன் பற்றி  அவதூறாக பேசிய அமைச்சர் பிடிஆரை நேரடியாக ஸ்டாலினால் தண்டிக்க முடியவில்லை. ஆனால் பிடிஆரின் துறையை மாற்ற வேண்டும் என்பதற்காக திமுகவின் பொதுச் செயலாளரான துரைமுருகன், சீனியர் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை வேதனைப்பட வைத்திருக்கிறார்.

துரைமுருகன் அறுபதாண்டு காலத்துக்கும் மேலாக திமுகவிலேயே பயணிப்பவர். வன்னியர் என்ற பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவரிடம் இருக்கும் துறையை ஜஸ்ட் லைக் தட் மாற்றலாம் என்று ஸ்டாலின் முடிவெடுத்து அது துரைமுருகனின் தலையீட்டின் பெயரிலேயே தற்போது தடுக்கப்பட்டிருக்கிறது.

பிடிஆர் என்ற ஒரு ஜூனியரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி பல்வேறு சீனியர் அமைச்சர்களும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த இரு வாரங்களாக பல அமைச்சர்களும் தங்கள் துறை மாற்றப்படுமோ என்ற கலக்கத்தில் துறைப் பணிகளையே கவனிக்கவில்லை.  பிடிஆர் என்ற ஒற்றை நபருக்காக இப்படி ஒட்டுமொத்த அமைச்சரவையையும் குலுக்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பிடிஆர் என்ற ஒற்றை ஸ்விட்சில் ஏற்பட்ட பிரச்சினையை சமாளிக்கப் போய், கேபினட்டில் ஆங்காங்கே ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டுவிட்டது  என்பதே திமுகவில் பேச்சாக இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது.

அமைச்சர்களின் துறையை மாற்றியது ஏன்? : முதல்வர் விளக்கம்!

அரசு பேருந்தில் பறை இசைக்கருவி: மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்!

+1
0
+1
1
+1
0
+1
4
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *