3 டெல்டா பகுதிகளில் ஏலத்திற்கு விடுத்த அறிவிப்பில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டுமென தமிழக பாஜக சார்பில் வலியுறுத்தப்படும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று (ஏப்ரல் 5) தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் விவாதத்தில் பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து பேசி வருகின்றனர்.
அதன்படி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், “ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா, கரண்ட் வேண்டுமா என்று கேட்டால் சோறுதான் முக்கியம். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
குறிப்பாக டெல்டா பகுதியில் விவசாயம் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் உணர்ந்த விஷயம்.
முந்தைய அதிமுக அரசு டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. ஆனால் ஒரு நிலம் சம்பந்தப்பட்ட ஏலம் வருகிறபோது, உள்ளூர் வருவாய் அதிகாரிகளின் அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே அரசாங்கம் நடவடிக்கையை எடுக்க முடியும்.
இந்த நிலக்கரி சுரங்க விவகாரத்தில் 3 டெல்டா பகுதிகளில் ஏலத்திற்கு அறிவித்ததை மாற்ற வேண்டும். இந்த அறிவிப்பில் இருந்து மத்திய அரசு விலக்கு கொடுக்க வேண்டுமென தமிழக பாஜகவின் சார்பில் நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கின்றோம். அதனை வலியுறுத்தவும் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா